January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”தமிழரின் பொருளாதாரத்தை அரசு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்”: சிறீதரன்

தமிழரின் பணத்தை பயங்கரவாதமாக காட்டி இலங்கையில் தமிழ் முதலீட்டாளர்களை தடுக்காது, அடுத்த வரவு செலவுத்திட்டமேனும் மிகையானதாக வருவதற்கு அவர்களின் பொருளாதாரத்தை அரசு பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென தமிழ் தேசியக்கூட்டமைப்பின் யாழ். மட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் சனிக்கிழமை வரவு செலவுத் திட்டம் மீதான முதலாம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

உலகளாவிய ரீதியில் மிகப்பலம் வாய்ந்த அமைப்பாக தமிழ் புலம்பெயர் அமைப்பு உள்ளது. அவர்களிடம் நிதி பலம் உள்ளது. அவர்களினால் முதலீடு செய்யக்கூடிய வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளன என்று சிறீதரன் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, ஹர்ஷடி சில்வா எம்.பி, பயங்கரவாதத்தினூடான நிதியைத்தான் அல்லிராஜா இந்த நாட்டுக்குள் கொண்டு வருவதாக கூறியிருந்த நிலையில் அது தொடர்பில் குறிப்பிட்ட சிறீதரன் எம்.பி, இவ்வாறான ஒரு தவறான செய்தியை ஹர்ஷ டி சில்வா போன்ற படித்த எம்பிக்கள் கூறக்கூடாது என்று வலியுறுத்தினார்.

அல்லிராஜா போன்றவர்கள் பெரும் முதலீட்டாளர்கள். அவர்கள் லைக்கா என்கின்ற தொலைபேசி வலையமைப்பை உலகத்தில் வைத்திருப்பவர்கள். பல்வேறு நிதியூட்டங்கள் ஊடாக உலகத்தில் பல தொழில் வருமானங்களை ஏற்படுத்திக்கொண்டவர்கள். அந்த வகையில் அவர்கள் இலங்கையில் பல முதலீடுகளை செய்கின்றனர் என்றார்.

இதேவேளை அவர்கள் இலங்கை மக்களுக்கு இன ,மொழி பாராது வீடுகளை அமைத்துக் கொடுத்துள்ளார்கள். கல்விக்கு உதவி செய்துள்ளார்கள். கொரோனா நிவாரண உதவிகளை வழங்கியுள்ளார்கள். அல்லிராஜா தமிழர் என்ற காரணத்திற்காக ஹர்ஷ டி சில்வா போன்ற கலாநிதிகள் தவறான கருத்துக்களை இந்த சபையில் கூறக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.

இனங்களுக்கிடையிலான புரிதலில் தான் தங்கியுள்ளது. தமிழர்களை அணைத்து செல்கின்றபோது நாட்டில் மாற்றத்தை, முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியும். வரவு செலவுத்திட்டங்கள் பற்றாக் குறை நிலைக்கு போகும் நிலைமை வராது என்று குறிப்பிட்டுள்ளார்.

இன்று தமிழர்கள் அரசியல் தீர்வொன்றுக்காக ஏங்குகிறார்கள். ஆகவே இந்த நாட்டிலே மொழி அடிப்படையிலான அதாவது தமிழ்,சிங்கள அடிப்படையிலான சமஸ்டி தீர்வை புதிய அரசியலமைப்பின் மூலம் முன்வைக்க வேண்டும். இதன் மூலம் அடுத்த வரவு செலவுத்திட்டம் மிகையானதாக வருவதற்கு தமிழர்களின் பொருளாதாரத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.