
இந்த நாட்டை பஞ்சத்திற்கு இட்டுச் செல்லும் அரசே ஆட்சியில் இருக்கிறது என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனை கூறினார்.
16 ஆம் திகதி அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தை அரசாங்கம் தடுத்துள்ளது. நாட்டில் சகலவற்றுக்கும் வரிசையில் நிற்கும் யுகத்தை ஏற்படுத்தி மக்களை இந்த அரசு இன்னல்களுக்கு ஆழ்த்தியுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
“இவற்றுக்கு எதிராக மக்கள் வீதிகளுக்கு இறங்கியுள்ளனர். மக்கள் வெளிப்படுத்தும் எதிர்ப்பை ஒன்று திரட்டி வெகுஜன எதிர்ப்பை அரசாங்கத்திற்கு காண்பிக்க பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய மக்கள் சக்திக்கு பொறுப்புள்ளது” என்றார்.
“இதற்காக 16 ஆம் திகதி ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்தோம். அரசாங்கத்தின் இந்த அடக்குமுறைக்கு இனியும் அஞ்சப் போவதில்லை. அதற்கான ஜனநாயக உரிமை தமக்கு உண்டு, ஆர்ப்பாட்டத்தை நடத்தியே தீருவோம்” எனவும் அவர் குறிப்பிட்டார்.
தமது போராட்டத்தை நசுக்கவே 250, 300 என்று கொவிட் மரணங்கள் நிகழும் போது பிறப்பிக்காத வர்த்தமானிகளை சுகாதார பணிப்பாளர் ஊடாக அரசு வெளியிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
”எதிர்வரும் 16ஆம் திகதி கொழும்பு ஹைட் பார்க் பகுதியில் அரச எதிர்ப்புப் போராட்டம் இடம்பெறும். பொய்யான சட்டங்களுக்கும், பொய்யான அச்சுறுத்தல்களுக்கும் நாங்கள் அஞ்சமாட்டோம் என்பதை அரசாங்கத்துக்குச் சொல்லிக் கொள்ளுகிறோம்” எனவும் கூறினார்.
நேற்றைய வரவு செலவுத் திட்டம் இந்த நாட்டில் பொருட்களின் விலையேற்றத்தினால் அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவை குறைப்பதற்கான எந்த தீர்வும் இல்லை.
அறுவடை குறைந்தால் விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்குவதாக விவசாய அமைச்சர் கூறினார். வரவு செலவுத் திட்டத்தில் அப்படி ஒன்றே இல்லை. இது விவசாயிகளை வெறுமனே ஏமாற்றும் செயலாகும்.
ஒய்வூதிய வயதை அதிகரித்தது அரச ஊழியர்களின் மீதுள்ள இரக்கத்தில் அல்ல. அவர்களுக்கான கொடுப்பனவுகளை செலுத்த பணமில்லை என்பதே உண்மை. அரச ஊழியர் ஓய்வு பெறும்போது உதவித் தொகையை செலுத்த முடியாததாலேயே இவ்வாறு செய்துள்ளார்கள் என்றும் இது வெற்று ஏமாற்று வேலை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.