November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘மாவீரர் மாதத்தின் புனிதத்தைப் பேணுவதில் அனைவரும் ஒத்துழைக்கவும்’: கஜேந்திரகுமார் எம்.பி

மாவீரர் மாதத்தின் புனிதத்தை பேணுவதற்கு அனைவரது ஒத்துழைப்பும் அவசியம் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.

இம்மாதம் 21 முதல் 27 ஆம் திகதி வரையான காலப்பகுதி தமிழ் மக்களின் உரிமை போராட்ட வரலாற்றில் முக்கியமானது என்று குறித்த கட்சி தெரிவித்துள்ளது.

வடக்கு கிழக்கு கத்தோலிக்க ஆயர் மன்றம் உயிரிழந்தவர்களை நினைவுகூர 20 ஆம் திகதியைப் பொதுவான நாளாக தீர்மானித்தமை ஆரோக்கியானதல்ல என்று பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுட்டிக்காட்டியுள்ளார்.

“இந்த நடவடிக்கை மாவீரர்களின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் தமிழ்த் தேசிய தாகம் கொண்டவர்களிடத்தில் பாரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

எதிர்வரும் 21 முதல் 27 ஆம் திகதி வரையான நாட்களை அரசியலில் இருந்து மறைக்கவோ, திசை திருப்பவோ முடியாது. குறித்த தினங்கள்; அனுஷ்டிக்கப்பட வேண்டும்.

வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் எங்கும் 27 ஆம் திகதி மாலை 06.05 மணிக்கு அனைத்து ஆலயங்களிலும் மணி ஒலிப்பி, வரலாற்றை கடத்துவதே வரவேற்கத்தக்க விடயமாகும்.”

என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.

வடக்கு- கிழக்கு ஆயர் மன்றம் தமது தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்று அக்கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.