July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் தொடரும் அனர்த்த நிலைமை – 12,000 குடும்பங்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்ப நடவடிக்கை!

இலங்கையில் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் வாழும் 12,000 குடும்பங்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் சிரேஷ்ட புவிச்சரிதவியலாளர் பேராசிரியர் வசந்த சேனாதீர குறிப்பிட்டார்.

தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் 12,000 குடும்பங்களே இவ்வாறு அடையாளம் காணப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கை கட்டம் கட்டமாக முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை கண்டி, மாத்தளை, நுவரெலியா, பதுளை, மொனராகலை, கேகாலை, குருநாகல், கொழும்பு, கம்பஹா, காலி, மாத்தறை, களுத்துறை, ஹம்பாந்தோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் ஏற்கனவே விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் அறிவித்துள்ளது.

மூன்று கட்டங்களின் கீழ் வெளியேறுவதற்கான சிவப்பு அபாய எச்சரிக்கை தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் வெளியிட்டுள்ளது.

இதன்படி, மூன்றாம் கட்டத்தின் கீழ் வெளியேறுவதற்கான சிவப்பு அபாய எச்சரிக்கை, கண்டி மாவட்டத்தின் தொலுவ, உடுநுவர, கங்கவட்டகோரளை, பஸ்பாக கோரளை, யட்டிநுவர, உடபலாத்த, ஹாரிஸ்பத்துவ, கங்க இஹல கோரள ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் கேகாலை மாவட்டத்தின் யட்டியந்தோட்டை, ருவன்வெல்ல, ரம்புக்கனை, அரநாயக்க, கேகாலை, மாவனெல்ல, புலத்கொஹூபிட்டிய, வரக்காபொல, தெஹியோவிட்ட, கலிகமுவ, தெரணியகல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் குருநாகல் மாவட்டத்தின் மல்லவபிட்டிய, அலவ்வ, மாவத்தகம, பொல்கஹாவெல, ரிதிகம, நாரம்மல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் விடுக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, இரண்டாம் கட்டத்தின் கீழ் முன்னெச்சரிக்கையுடன் இருப்பதற்கான அபாய எச்சரிக்கை பதுளை, கொழும்பு, காலி, களுத்துறை, கண்டி, மாத்தளை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளுக்கும் விடுக்கப்பட்டுள்ளது.

காலி, கம்பஹா, களுத்துறை மாவட்டத்தின் மாத்தளை, நுவரெலியா, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளுக்கும் முதலாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.