July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் 10 நாட்களில் ஆயிரத்திற்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவு!

அதிகரித்து வரும் டெங்கு தொற்று நோயை கட்டுப்படுத்த மக்கள் போதிய முனைப்புடன் செயற்பட வில்லை என சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாட்டில் தொடரும் மழையுடனான காலநிலை காரணமாக எதிர்காலத்தில் டெங்கு தொற்று நோய் மிக பாரிய அளவில் பரவல் அடையும் என்பதால் மக்கள் விழிப்புடன் இருக்குமாறு சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நவம்பர் மாதத்தின் கடந்த 10 நாட்களில் மட்டும் 1,361 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முழுவதும் 770 நோயாளர்கள் மட்டுமே பதிவாகிய நிலையில், இந்த எண்ணிக்கை மிக அதிகம் எனவும் சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

வெள்ள நிலைமைகள் காரணமாக டெங்கு நோயை பரப்பும் நுளம்புகள் பெருக்கம் அடைய அதிக இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் சமூக வைத்திய நிபுணர் மருத்துவர் ஷிலந்தி செனவிரத்ன வலியுறுத்தினார்.

“எனவே, இந்த நிலைமை குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்” என்று அவர் மேலும் அறிவுறுத்தினார்.

கொழும்பு, மட்டக்களப்பு, பதுளை, கேகாலை மற்றும் குருநாகல் மாவட்டங்களில் கணிசமான எண்ணிக்கையிலான நோயாளிகள் கண்டறியப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

கொவிட் தொற்று பயம் காரணமாக அறிகுறிகள் உள்ளவர்கள் வைத்தியசாலைகளுக்கு செல்வதை தாமதப்படுத்துவது பெரும் கவலை அளிப்பதாகவும் அவர் கூறினார்.

எனவே, இரண்டு நாட்களுக்கு அதிகமாக காய்ச்சல் நீடித்தால், கூடிய விரைவில் மருத்துவ ஆலோசனையை பெறுமாறு மருத்துவர் செனவிரத்ன மக்களை வலியுறுத்தினார்.

தவிர, மக்கள் தங்கள் சுற்றுப்புற சூழலில் நுளம்புகள் பெருகும் இடங்களையும் அழிப்பதில் பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.