2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பொருட்களின் விலை அதிகரிப்புக்கு எவ்வித தீர்வும் பரிந்துரைக்கப்படவில்லை என்று ஜேவிபி தெரிவித்துள்ளது.
நிதி அமைச்சரால் இன்று சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும் போது, ஜேவிபி தலைவர் அனுரகுமார திசாநாயக்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சேதன உரத்தைப் பயன்படுத்தும் விவசாயிகளின் விளைச்சல் பாதிக்கப்பட்டால் நஷ்டஈடு வழங்கப்படும் என்று அரசாங்கம் தெரிவித்து வந்தாலும், இந்த வரவு செலவுத் திட்டத்தில் அதுகுறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொருட்களின் விலை மக்களால் தாங்கிக்கொள்ள முடியாதளவு அதிகரித்துள்ளமை மற்றும் பொருட்களின் தட்டுப்பாடு என்பன நாட்டில் உள்ள பிரதான பிரச்சினைகளாகும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்கத்தின் செலவுகளாக 5.2 டிரில்லியன் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், வருமானமாக 2.2 டிரில்லியன் ரூபாய் மாத்திரமே குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் ஜேவிபி தெரிவித்துள்ளது.
3 டிரில்லியன் ரூபாய் கடன் பெறும் வரவு செலவுத் திட்டமாகும் என்று அனுரகுமார் திசாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையின் வீழ்ச்சிப் பொருளாதாரப் பயணத்தை மாற்றியமைக்க எவ்வித திட்டமும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.