(file photo)
இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அனர்த்தங்களில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்வடைந்துள்ளது.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அறிக்கைப்படி, இந்த அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 30,185 ஆகும்.
இவர்களில் 12,700 க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அறிக்கை மேலும் தெரிவிக்கின்றது.
இதேவேளை, நாட்டில் பெய்துவரும் கனமழை காரணமாக உயர்வடைந்து காணப்பட்ட ஆறுகளின் நீர்மட்டம் தற்போது படிப்படியாக வழமைக்கு திரும்பி வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனிடையே மண்சரிவு அபாயம் காரணமாக கடுகன்னாவையில் இருந்து மூடப்பட்ட கண்டி – கொழும்பு வீதியை மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மலைகளில் இருந்து வரும் மழை நீர் மண் அரிப்பை ஏற்படுத்துவதனால் பாரதூரமான விளைவை ஏற்படுத்தலாம் எனவும் இது தொடர்பான ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கடுகன்னாவை பிரதேசத்தை பார்வையிட்ட பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்தார்.