கெரவலபிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலைய ஒப்பந்தத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்களை பூரண நீதியரசர்கள் ஆயத்தின் முன்நிலையில் விசாரிக்குமாறு உயர்நீதிமன்றத்திடம் சட்டமா அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பான மனுக்கள் மேல் நீதிமன்ற நீதிபதிகளான புவனேக அலுவிஹாரே, ஏ.எச்.எம்.டீ. நவாஸ் மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன் போது சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் பர்ஸானா ஜெமீல் இந்த கோரிக்கையை முன்வைத்ததோடு, இது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு என்றும் குறிப்பிட்டார்.
கெரவலபிட்டிய மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு விற்பனை செய்வதற்கு எதிராக எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித் மற்றும் எல்லே குணவன்ஷ தேரர் ஆகியோரும் அடிப்படை உரிமை மீறல் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
எதிர்க்கட்சியின் அடிப்படை உரிமை மீறல் மனுவின் பிரதிவாதிகளாக பிரதமர் மகிந்த ராஜபக்ஸ, அமைச்சரவை, வெஸ்ட் கோஸ்ட் மின் வலு நிறுவனம், யுகதனவி நிலைய உரிமையாளர், நியூ போட்ரஸ் நிறுவனம், சட்டமா அதிபர் உட்பட மேலும் சிலர் பெயரிடப்பட்டுள்ளனர்.