இலங்கையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தை நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து, உரையை ஆரம்பித்தார்.
2022 ஆம் ஆண்டுக்கான செலவினங்களுக்காக இந்த வரவு- செலவுத் திட்டத்தின் ஊடாக 250,534 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படவுள்ளது.
சுதந்திர இலங்கையின் 76 ஆவது வரவு செலவுத் திட்டத்தை தான் முன்வைப்பதாக நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
வரவு செலவுத் திட்ட உரையை ஆரம்பித்து நிதி அமைச்சர் உரையாற்றும் போது,
“முழு உலகமும் ஒரு நெருக்கடி நிலையில் இருக்கும் போது நிதி அமைச்சராக எனது முதலாவது வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கிறேன்.
இன்று கொரோனா உட்பட நாம் சந்தித்துள்ள நெருக்கடி நிலையால் இலங்கை 500 பில்லியன் டொலர் வருவாயை இழந்துள்ளது.
நிலையான பொருளாதாரம், சுற்றுச் சூழல் பாதுகாப்பு, தேசிய பாதுகாப்பு, தொற்று நோய் ஒழிப்பு, சுற்றுலாத்துறை போன்ற துறைகளில் நாம் கவனம் செலுத்துகிறோம்”.
சேவைகள் வழங்குதல் மற்றும் உற்பத்திப் பொருளாதாரத்துக்கு கூடிய கவனம் செலுத்த எதிர்பார்க்கிறோம்.
மொத்த அரச சேவையும் உற்பத்திப் பொருளாதாரத்துக்கு தடையாக அன்றி, ஒத்துழைக்கும் விதமாக வேண்டும்.
வெளிநாட்டு செலாவணி கையிருப்பைப் பலப்படுத்த விசேட திட்டங்கள் செயற்படுத்தப்பட வேண்டிய தேவையாக உள்ளது.
கடந்த அரசாங்கம் பெற்றுக்கொண்ட பெருந்தொகைக் கடன்களை நாம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். ஜனாதிபதி கோட்டாபய தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது முதல் சர்வதேச கடன்களை முறையாக செலுத்தி வருகிறோம்”.
சர்வதேச போதைப்பொருள் மாபியா இலங்கை எதிர்கொள்ளும் பிரதான சவாலாகும் என்று நிதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிவில் செயற்பாட்டாளர்கள் என்ற போர்வையில் சில சர்வதேச முகவர்கள் இலங்கைச் சமூகத்துக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வரவு செலவுத் திட்டம் 2022 – முக்கிய அம்சங்கள்
- நிலையான பொருளாதாரம், சுற்றுச் சூழல் பாதுகாப்பு, தேசிய பாதுகாப்பு போன்றவற்றில் கவனம் செலுத்தல்.
- கொரோனா தடுப்பு, தடுப்பூசி ஏற்றம் மற்றும் மக்களின் நோயெதிர்ப்புச் சக்தியை ஊக்குவிக்கும் வழிகளில் கவனம் செலுத்தல்.
- தகவல் தொழில்நுட்ப துறையை புதுப்பித்தல், சுற்றுலாத் துறையை மேம்படுத்தல் போன்றவற்றால் அந்நிய செலாவணியை அதிகரித்தல்.
- அரச கட்டட மற்றும் அலுவலக நிர்மாணப் பணிகள் இடைநிறுத்தல்.
- அரச அதிகாரிகளுக்கான எரிபொருள் கொடுப்பனவை 5 லீட்டரால் குறைத்து, தொலைபேசி கொடுப்பனவை 25 வீதத்தால் குறைத்தல்.
- பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்துக்கு உள்வாங்கப்படும் பதவிக் காலத்தை 5 இல் இருந்து 10 வருடங்களாக அதிகரித்தல்.
- அரச ஊழியர்களுக்கான சம்பள கொடுப்பனவு முறையைத் திருத்தல்.
- அரச சேவையில் இருந்து ஓய்வு பெறும் வயதெல்லையை 65 வரை அதிகரித்தல்.
- சமூர்த்தி திட்டத்தை புதுப்பித்தல்.
- கிராம மக்களின் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்யும் விதத்தில் சமூர்த்தி வங்கிகளை மேம்படுத்தல்.
- அரச ஊடகங்களின் நிதி ஒழுக்கம் மற்றும் வர்த்தக செயற்பாடுகளை மேம்படுத்தல்.
- இலங்கை சுங்கத்துடன் ஒன்றிணைந்து செயற்படும் நிறுவனங்கள் அனைத்தையும் ஒன்றிணைத்து, ஏற்றுமதி- இறக்குமதியை மேம்படுத்தல்.
- தொலைபேசி மற்றும் இணைய சமிக்ஞைகளில் உள்ள சிக்கல்களை தீர்த்து, 5ஜி தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தல.
- முச்சக்கர வண்டி சேவை வழங்குநர்கள் மற்றும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்க்க ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு ஒன்றை நியமித்தல்.
- சிரேஷ்ட பிரஜைகளைப் பாதுகாக்கும் நோக்கத்தில் ஓய்வூதியம் பெறாதவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை நிறுவுதல்.
- விசேட தேவையுடையவர்களைப் பாதுகாக்க விசேட திட்டம்.
- இளைஞர்கள் தொழில் தேடுவதைத் தவிர்த்து, இளைஞர்களை தொழில்முனைவோராக மாற்றுதல், புதிய வியாபார பதிவுக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.
- சர்வதேச அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களுடன் ஒன்றிணைந்து மருந்து உற்பத்திகளை மேற்கொள்ளல்.
- மருந்துகளின் விலைகளைக் கட்டுப்படுத்த விலைச் சூத்திரம் ஒன்றை அறிமுகப்படுத்தல்.
- ஆடை உற்பத்தித் துறைக்குத் தேவையான மூலப்பொருட்களை இலங்கையில் உற்பத்தி செய்தல்.
- மாணிக்கம், இரத்தினக் கல் கொள்வனவு மையமாக இலங்கையை மாற்றுதல்.
- தேசிய இறப்பரைக் கொண்டு உற்பத்திகளை முன்னெடுப்பதற்கும் இறப்பர் இறக்குமதியைக் குறைப்பதற்கும் தீர்மானம்.
- ஆரோக்கியமான சுற்றுலா மையமாக இலங்கையை மாற்றுதல்.
- ஆயர்வேத மருத்துவம் மற்றும் சுதேச மருத்துவத்தை ஊக்குவித்தல்.
- புதிய விவசாய உற்பத்திகளை ஊக்குவித்து, ஒத்துழைத்தல்.
- புதிய விவசாயிகளை உருவாக்கி, அரச காணிகளை வழங்குதல். அதற்காக புதிய சட்டங்களைக் கொண்டுவருதல்.
- விவசாயிகளைப் பாதுகாப்பதற்கான புதிய சட்டம் ஒன்றைக் கொண்டுவருதல்.
- இயற்கை, சேதன உர உற்பத்தியை ஊக்குவித்தல்.
- இலங்கையை ஆசியாவின் கடல்சார் மையமாக மாற்றுதல்.
- வெளிநாட்டு முதலீடுகள் மீதுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்தி, முதலீட்டாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தல்.
- ஒவ்வொரு மாவட்டத்துக்கும் நவீன கால பாடசாலை மற்றும் மருத்துவமனையை நிறுவுதல்.
- நிலைபேரான அபிவிருத்தியின் இலக்குகளை அடைய வெளிநாட்டு நிறுவனங்களின் உதவியைப் பெறுதல்.
- தொழிற்சங்க மற்றும் தொழிற்சங்கம் ஒன்றிணைவதற்குள்ள சட்ட தடைகளை நீக்குதல்.
2022 ஆம் ஆண்டில் அரசாங்கத்தின் செலவுகள்
உற்பத்திப் பொருளாதாரம், விவசாயத்துறை:
- நச்சுத் தன்மையற்ற உரப் பயன்பாட்டுக்கு 4000 மில்லியன் ஒதுக்கீடு. ஒரு ஹெக்டெயாருக்கு 5000 ரூபாய் நிதி உதவி.
- சேதன உரப் பயன்பாட்டுக்கு 35,000 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
- புதிய விவசாய உற்பத்தி செயற்பாடுகளுக்கு 22,000 மில்லியன்.
மீன்பிடி மற்றும் நீர்வாழ் உயிரின தொழிற்துறை
- 2022 ஆம் ஆண்டில் 196 மில்லியன் நன்னீர் மீன் குஞ்சுகளை நீர் நிலைகளுக்கு விடுவிக்க 1000 மில்லியன் ஒதுக்கீடு.
கால்நடை வளர்ப்புத் துறை
- முட்டை மற்றும் கோழி இறைச்சி உற்பத்தியை மேம்படுத்தல்.
- பால் உற்பத்தியைக் கூட்ட 1000 மில்லியன் நிதி ஒதுக்குதல்.
ஏற்றுமதி தொழில்துறை ஊக்குவிப்பு
- சேதன உரம், ஆடை, இறப்பர், விளையாட்டுப் பொருட்கள் போன்ற உற்பத்திகளை மேம்படுத்த 5000 மில்லியன் ஒதுக்கீடு.
பிரதேச, மாவட்ட மட்ட சிறு மற்றும் மத்திய வர்த்தக உற்பத்தி வலயம்
- மேல் மாகாணத்திற்கு வெளியே தொழில்துறை உற்பத்திகளை முன்னெடுப்பவர்களுக்கு அரசாங்கம் ஒத்துழைத்தல்.
- அதற்காக 5000 மில்லியன் நிதி ஒதுக்கீடு.
ஏனைய திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள்
- அனைவருக்கும் குடிநீர் வழங்க 15 ஆயிரம் மில்லியன் நிதி ஒதுக்கீடு.
- வீதி அபிவிருத்திக்கு 20 ஆயிரம் மில்லியன் நிதி ஒதுக்கீடு.
- இயற்கை சக்தி மற்றும் மின் உற்பத்திக்கு 500 மில்லியன் நிதி ஒதுக்கீடு.
- நகர வீடு அபிவிருத்திக்கு 2000 மில்லியனும் நகர 5000 ரூபாயும் நிதி ஒதுக்கீடு.
- தோட்ட வீடமைப்புத் திட்டத்துக்கு 500 மில்லியன் நிதி ஒதுக்கீடு.
- ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுக்கும் 30 இலட்சம் நிதியுதவி.
- கொரோனாவால் வருமானம் இழந்த சிறிய மற்றும் மத்திய தர வியாபாரிகளுக்கு உதவுவதற்கு 5000 மில்லியன் ரூபாய் நிதியுதவி.
- கொரோனாவால் வருமானம் இழந்த பாடசாலை வேன் மற்றும் பஸ் உரிமையாளர்களுக்கு 400 மில்லியன் ரூபாய்.
- கொரோனாவால் வருமானம் இழந்த முச்சக்கர வண்டி உரிமையாளர்களுக்கு 700 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.
- சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு 2000 மில்லியன்.
- வனப் பாதுகாப்புக்கு மேலதிக 2000 மில்லியன்.
- கிராமப் புற பாடசாலை அபிவிருத்திக்கு 5300 மில்லியன்.
- சுகாதார வசதிகளுக்கு மேலதிகமாக 5000 மில்லியன்.
- விளையாட்டுத்துறை அபிவிருத்திக்கு 3000 மில்லியன்.
- நீர்ப்பாசன மேம்பாடு மற்றும் பாதுகாப்புக்கு மேலதிக 2000 மில்லியன்.
- தொழில் பயிற்சி நடவடிக்கைகளுக்கு 2000 மில்லியன்.
- ரயில் பயணிகள் போக்குவரத்துக்கு மேலதிக 2000 மில்லியன்.
- நீதித்துறை செயல்பாட்டில் ஏற்படும் தாமதங்களைத் தடுத்து, திறமையின்மைகளைத் தவிர்ப்பதுடன், நீதித்துறை செயன்முறையை டிஜிட்டல் மயமாக்க மேலும் 5000 மில்லியன்.
- பொது பாதுகாப்பு – இலங்கை பொலிஸ் துறைக்கு 500 மில்லியன்.
- சிறை கைதிகளுக்கான சுகாதார வசதிகள் (சிறைகளில் அதிகரித்து வரும் எண்ணிக்கை காரணமாக) மேலும் 200 மில்லியன்.
- மூத்த குடிமக்கள் மற்றும் விசேட தேவையுடையவர்களுக்கான வசதிகளுக்காக 1000 மில்லியன்.
அரசாங்கத்தின் மேலதிக ஒதுக்கீடுகளாக:
- வீட்டு அடிப்படையிலான பொருளாதாரம் மற்றும் நலன்: 31,000 மில்லியன்.
- கர்ப்பிணிகளுக்கான போசாக்கு பொதியை 24 மாதங்களுக்கு வழங்க 1000 மில்லியன்.
- வறுமையில் வாடும் குடும்பங்களுக்கான நிவாரணப் பொதி: 15,000 மில்லியன் ஒதுக்கீடு
- ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுகளிலும் பெண் தொழில் முனைவோருக்கான வீட்டுக் கடை கருத்துரு: 14,000 க்கும் மேற்பட்ட வீட்டுக் கடைகளுக்கு 15,000 மில்லியன் ஒதுக்கீடு.
- பொதுச் சேவையை டிஜிட்டல் மயமாக்கலுக்கு 500 மில்லியன்
- ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள முரண்பாடு: தற்போதைய ஒதுக்கீட்டிற்கு மேலதிகமாக சம்பளத்திற்காக 30 ஆயிரம் மில்லியன்.
- அரச துறையில் பட்டதாரி ஆட்சேர்ப்பு: ஏற்கனவே பணியமர்த்தப்பட்டவர்களுக்கு 2022 இல் நிரந்தர வேலைவாய்ப்பு.
- அரசியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டவர்களுக்காக 100 மில்லியன்.
- ஓய்வூதிய முரண்பாடு: முதல் கட்டமாக 500 மில்லியன்.
- கிராமப் புறங்களில் உள்ள பௌத்த விகாரைகளின் அபிவிருத்திக்காக 500 மில்லியன்.
- காணாமல் போனவர்களுக்கான இழப்பீடு வழங்க 300 மில்லியன்.
- தொழில்சார் சங்கங்களுக்காக 100 மில்லியன்.
அரசாங்கத்தின் வருவாய் ஏற்பாடுகள்
- மோட்டார் வாகன விபத்தை ஏற்படுத்திய நபரிடம் இருந்து தண்டப் பணம் பெறல்.
- இலங்கை மத்திய வங்கியின் நடத்தை விதிகளை மீறிஇ பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனம் சம்பாதித்த பணத்தில் 8.5 பில்லியனை திறைசேரிக்கு பெறுதல்.
- வருவாய் ஈட்டும் பொருட்டு 5ஜி அலைவரிசைகள் ஏலத்தில் விடப்படும்.
- அபராதம் மற்றும் வரிகளை செலுத்திய பின்னரே சுங்க வரிக்கு உட்பட்ட அனைத்து வாகனங்களும் விடுவிக்கப்படும்.
- கலால் வரியை அதிகரித்து, அரசாங்கத்துக்கு 25 பில்லியன் வருவாய் பெறல்.
- (2020/2021 ஆண்டில்) 2000 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான வருவாய் ஈட்டும் வணிகங்களுக்கு 25% வரி. அவ்வாறான 62 வணிகங்களால். 100 மில்லியன் வரி வருமானம் ஈட்டல்.
- வங்கி மற்றும் நிதிச் சேவைகள்/ காப்பீட்டு நிறுவனங்கள்: 1 ஜனவரி 2022 முதல் டிசம்பர் 31, 2022 வரை மாதத்திற்கு 15% இல் இருந்து 18% வரை வட் வரி அதிகரிக்கப்படும். வங்கி அல்லது நிதி நிறுவனம் வாடிக்கையாளர்களிடமிருந்து இந்த வரியை வசூலிக்க முடியாது. இதன்மூலம் அரசுக்கு 14 பில்லியன் வருமானம்.
- ஏப்ரல் 1, 2022 முதல் 120 மில்லியன் ரூபாயிற்கு மேல் வருமானம் ஈட்டுபவர்கள் ஆண்டுக்கு 2.5% விகிதம் சமூக நல நிதி செலுத்த வேண்டும்.
- ஒவ்வொரு சிகரெட்டுக்கும் 5 ரூபாயால் வரி அதிகரிக்கப்படும்.