மட்டக்களப்பு, மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான பாதீடு சபை உறுப்பினர்களின் ஏகமனதான ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.
மண்முனை தென் எருவில் பற்றுப் பிரதேச சபையின் தவிசாளர் ஞா.யோகநாதன் தலைமையில் நேற்றைய தினம் இடம்பெற்ற சபை அமர்வின் போது பாதீட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் சபை உறுப்பினர்களால் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
மேற்படி சபையானது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்டுப்பாட்டின் கீழுள்ள சபை என்பது குறிப்பிடத்தக்கது.
அதேநேரம், மட்டக்களப்பு ஏறாவூர்பற்றுப் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான பாதீடும் அனைத்து உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.
இதுவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள சபை என்பதுடன், சபையின் தவிசாளர் எஸ்.சர்வானந்தம் அவர்களால் பாதீட்டு அறிக்கை இன்றைய தினம் சமர்ப்பிக்கப்பட்டிருந்த வேளையிலேயே சபையில் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.