January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

புலம்பெயர் இலங்கையர்கள் பணம் அனுப்புவதில் உள்ள நன்மைகள் குறித்து மத்திய வங்கி விளக்கம்

வெளிநாடுகளிலிருந்து அனுப்பப்படும் பணவனுப்பல்களின் தொகைக்கமைய வெளிநாட்டில் தொழில்புரிகின்ற இலங்கையர்களுக்கு பல்வேறு எதிர்கால நன்மைகள் கிடைக்கவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளில் தொழில்புரியும் இலங்கையர்களால் அனுப்பப்படுகின்ற பணவனுப்பல்கள், கடந்த 5 வருடங்களாக டொலர் 7 பில்லியனுக்கும் அதிகமாக வருடாந்த சராசரி பெறுமதியுடன் நாட்டினுள் வருகின்ற முக்கிய வெளிநாட்டுச் செலாவணி உட்பாய்ச்சலொன்றாக இருந்து வருகின்றது.

இவ்வுறுதியான, படுகடன் அல்லாத உட்பாய்ச்சலைக் கருத்திற்கொண்டு, அரசாங்கமும் இலங்கை மத்திய வங்கியும் பணியாளருக்கும் அதேபோன்று அரசாங்கத்திற்கும் நன்மைபயக்கின்ற விதத்தில் பணவனுப்பல்கள் அவற்றின் முழுமையான உள்ளார்ந்தங்களையும் அடைந்துகொள்வதை உறுதிசெய்வதற்கு நடவடிக்கை எடுக்கின்ற செயன்முறைகளை முன்னெடுக்கின்றன.

இது தொடர்பில், இலங்கை மத்திய வங்கியானது ஒய்வூதியம் ஓய்வுநிதிய நன்மைகள், விபத்து ஆயுட்காப்புறுதி நன்மைகள், வீடமைப்பிற்கான அத்துடன் அல்லது இலங்கைக்கு திரும்புகின்றபோது சுயதொழிலுக்கான குறைவான வட்டிக் கடன்கள் உள்ளடங்கலாக வங்கித்தொழில் வசதிகள் மற்றும் அதிகரித்த தீர்வையற்ற சலுகைகள் என்பன உள்ளடங்கலாக புலம்பெயர் பணியாளர்களுக்கான ஊக்குவிப்புப் பொதிகளை அறிமுகப்படுத்துவதற்காக தற்போது தொழில் அமைச்சு, வெளிநாட்டு தொழில் ஊக்குவிப்பு மற்றும் சந்தைப்படுத்தல் பன்முகப்படுத்தல் இராஜாங்க அமைச்சு, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம், வங்கித்தொழில்துறை என்பவற்றுடனும் வேறு பல ஆர்வலர்களுடனும் கூட்டிணைந்து பணியாற்றுகின்றது.

அத்தகைய ஊக்குவிப்புகளை வழங்குகின்ற உத்தேசிக்கப்பட்ட நன்மைகளை நாடு பெற்றுக்கொள்வதனை உறுதிப்படுத்தும் பொருட்டு நன்மைகளைக் கொண்ட இப்பொதியானது முறைசார் வங்கித்தொழில் முறைமை அல்லது வங்கித்தொழில் வழிகளூடாக வழிப்படுத்துகின்ற ஏனைய வேறு முறைசார் பணமாற்றல் முறைமையூடாக தமது வருவாய்களை இலங்கைக்கு அனுப்புகின்றவர்களுக்கு மாத்திரம் கிடைக்கப்பெறச் செய்யப்படவுள்ளது.

இந்த ஊக்குவிப்புகள், அவ்வாறு இலங்கைக்கு பணவனுப்பல்கள் செய்யப்படுகின்ற வெளிநாட்டுச் செலாவணித் தொகையுடன் இணைந்ததாகவிருக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. முன்மொழியப்பட்ட ஊக்குவிப்புப் பொதி பற்றிய தொழிற்பாட்டு விபரங்கள் தொடர்புடைய அரசாங்க அதிகாரிகளுடனும் வங்கித்தொழில் துறையுடனுமான ஆலோசனையுடன் காலக்கிரமத்தில் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தப்படும்.

அதேவேளை, மேற்குறித்த நோக்கங்களுக்காக அவ்வாறு இலங்கைக்கு பணவனுப்பல் செய்யப்படுகின்ற வெளிநாட்டுச் செலாவணியின் பெறுமதியினை எளிதாக கண்டுபிடிக்கக்கூடிய விதத்தில் இலங்கையிலுள்ள பெயர்குறிக்கப்பட்ட வங்கிக் கணக்கொன்றிற்கு தமது பணவனுப்பல்கள் முறையான வங்கித்தொழில் முறைமையினூடாக அனுப்பப்படுகின்றது என்பதை உறுதிசெய்யுமாறு வெளிநாட்டில் வாழ்கின்ற இலங்கை சமூகத்தினை இலங்கை மத்திய வங்கி வலியுறுத்துகின்றது.