July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘புலம்பெயர் அமைப்புகள் நாட்டுக்கு வளமா? சுமையா? என்பதை அரசாங்கம் தீர்மானிக்க வேண்டும்’

உலகில் உள்ள மிகப்பெரிய புலம்பெயர் அமைப்புகளில் இலங்கையின் தமிழ் புலம்பெயர் அமைப்பும் ஒன்றாகும். இவர்கள் கல்வி, திறமை, நிதி ரீதியில் பலமாகவும் உள்ளனர். இவர்களால் நாட்டிற்கு உதவி செய்ய முடியும்.எனவே அவர்கள் குறித்து நிதி அமைச்சர் சிந்திக்க வேண்டும். புலம்பெயர் அமைப்புகள் நாட்டுக்கு வளமா அல்லது சுமையா என்பதை இப்போது தீர்மானிக்க வேண்டும் என எதிர்க்கட்சியின் உறுப்பினர் இரான் விக்கிரமரத்ன நாடாளுமன்றில் தெரிவித்தார்.

இனவாதம் மற்றும் பிரிவினைவாதத்தை நாட்டில் பரப்பியுள்ளனர்.இனவாதத்தையும் பிரிவினைவாதத்தையும் அரசியலுக்காக பயன்படுத்துவதை நாம் நிராகரிக்க வேண்டும். சகல இனத்திலும் ஒரு சிறிய குழு இனவாதத்தை பரப்புகின்றது.ஆனால் அதற்கு பெரும்பாலான மக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்துகின்றனர்.

புலம்பெயர் தமிழர் அமைப்புகள் என அடையாளப் படுத்தினாலும் பெரும்பாலான தமிழ் புலம்பெயர் அமைப்புகள் நாட்டை நேசிக்கும் தரப்பாகவே உள்ளனர். எனவே புலம்பெயர் அமைப்புகள் நாட்டுக்கு வளமா அல்லது சுமையா என்பதை நாம் தீர்மானிக்க வேண்டும்.

உலகில் உள்ள மிகப்பெரிய புலம்பெயர் அமைப்புகளில் இலங்கையின் புலம்பெயர் அமைப்பும் ஒன்றாகும். இவர்கள் உயரிய கல்வி மட்டத்தில், திறமையான, நிதி ரீதியில் பலமாகவும் உள்ளனர்.அவர்களால் நாட்டிற்கு உதவி செய்ய முடியும். எனவே அவர்கள் குறித்து நிதி அமைச்சர் சிந்திக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நாட்டில் அத்தியாவசிய பொருட்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டுள்ளது.இது எங்கு சென்று முடியும் என தெரியவில்லை.இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கவில்லை என்றால் மக்கள் வீதிக்கு இறங்கி போராடும் நிலைமை உருவாகும். இவை அனைத்துமே இயற்கையாக உருவான பிரச்சினை அல்ல, தீர்வு காணக்கூடிய பிரச்சினைகளே எம்முன் உள்ளது. எனவே இதனை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும், அதனை கருத்தில் கொண்டு பொருத்தமான வரவு செலவு திட்டத்தை முன்வைக்க வேண்டும் என்றார்.