July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வடக்கு, கிழக்கில் திட்டமிட்ட சிங்களமயமாக்கல்; சுவிஸ் தூதுவரிடம் ஆயர்கள் சுட்டிக்காட்டு

வடக்கு, கிழக்கு பகுதிகளில் அபிவிருத்திப் பணிகள் புறக்கணிப்பட்டு திட்டமிட்ட சிங்களமயமாக்கல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று வடக்கு – கிழக்கு ஆயர் மன்றத்தினர், சுவிட்ஸர்லாந்து தூதுவரிடம் வலியுறுத்தினர்.

வடக்கு, கிழக்கு பகுதிகளில் பணியாற்றிவரும் ஆயர்களுக்கும் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான சுவிட்ஸர்லாந்தின் தூதுவர் டொமினிக் பார்க்லர் மற்றும் அவரின் குழுவினருக்கும் இடையிலான சந்திப்பு யாழ். ஆயர் இல்லத்தில் நடைபெற்றது.

இந்தச் சந்திப்பில் வடக்கு, கிழக்கு பகுதிகளில் தற்போது நிலவிவரும் அரசியல் மற்றும் அபிவிருத்திப் பணிகள் பற்றிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

இதன்போது ஆயர்கள் வடக்கு,கிழக்கில் நிலவிவரும் தற்போதைய நெருக்கடி நிலமைகளை எடுத்துக்கூறினர்.

வடக்கு, கிழக்கு பகுதிகளில் அபிவிருத்திப் பணிகளில் அரசு அசமந்தப்போக்குடன் செயற்பட்டு வருவதையும், இப்பிரதேசங்களில் இந்திய அரசு முன்னெடுக்க முனையும் பணிகளுக்கு தடைகளை ஏற்படுத்தி அந்த அபிவிருத்திப் பணிகளை தென்பகுதியில் முன்னெடுக்க முயற்சிப்பதையும் ஆயர்கள் சுட்டிக்காட்டினர்.

அத்துடன் திருகோணமலை, மன்னார், முல்லைத்தீவு ஆகிய பகுதிகளில் மறைமுகமாகவும் நேரடியாகவும் அரசு முன்னெடுத்து வரும் சிங்களமயமாக்கல் செயற்திட்டங்களை அவர்கள் விபரித்ததோடு, தமிழ் மக்கள், இலங்கை அரசின் மீது கொண்டுள்ள அதிருப்தியையும் எடுத்துரைத்தனர்.

இந்தச் சந்திப்பில் வடக்கு – கிழக்கு ஆயர் மன்றத்தினர் சார்பில் யாழ் ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை, மன்னார் ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ, திருகோணமலை ஆயர் நோயல் இம்மானுவேல் ஆண்டகை ஆகியோர் கலந்துகொண்டனர்.