எதிர்வரும் தேர்தல்களின் போது தேசியப்பட்டியலில் 50 வீதம் பெண்களுக்கு வழங்கப்படுவதுடன், வேட்பாளர் பட்டியலில் 25 வீதம் பெண்களுக்கு வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தை புதிய ஹெல உறுமய கட்சி, தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாக பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளம் காண்பதற்கும் தேவையான திருத்தங்களை பரிந்துரைப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழுவில் பரிந்துரைத்துள்ளது.
தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாக பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளம் காண்பதற்கும் தேவையான திருத்தங்களை பரிந்துரைப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழு அதன் தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தலைமையில் கூடியபோதே புதிய ஹெல உறுமய இந்தப் பரிந்துரையை முன்வைத்தது.
புதிய ஹெல உறுமய கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி விசேட குழு முன்னிலையில் மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் உதய கம்மன்பில குறிப்பிடுகையில், போஸ்டர் பிரசாரங்கள் தொடர்ந்தும் நிறுத்தப்பட வேண்டும் என்றார்.
தேர்தல்களின்போது வேட்பாளர்கள் செலவு செய்யும் பணத்தின் அளவுக்கான வரையறையொன்றை ஏற்படுத்தல், தேர்தல் முடிவடைந்து மூன்று மாதங்களுக்குள் செலவுகள் குறித்த விபரங்களை பகிரங்கப்படுத்தல் மற்றும் நன்கொடைகளுக்கான மூலங்கள் குறிப்பிடப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஜனாதிபதியை நியமிப்பதற்கான தடவைகள், தேர்தல் தொகுதி எல்லை நிர்ணயம் செய்தல் போன்ற விடயங்கள் குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இந்தக் கூட்டத்தில் அமைச்சர் நிமல் சிறிபால.டி.சில்வா, பாராளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், மதுர விதானகே, சாகர காரியவசம், குறித்த குழுவின் செயலாளரும் பாராளுமன்ற பணியாட் தொகுதியின் பிரதானியும் பிரதி செயலாளர் நாயகமுமான குஷானி ரோஹண தீர ஆகியோரும் கலந்து கொண்டனர்.