இலங்கையில் கொவிட் தொற்றுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை சிறிது அதிகரித்துள்ளதாக லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையின் வைத்திய நிபுணர் சன்ன டி சில்வா தெரிவித்தார்.
ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையின் வைத்திய நிபுணர், இது ஒரு பாரதூரமான நிலைமை என்றும் விரைவில் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.
“கடந்த சில நாட்களாக நாட்டில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை மிதமான அளவில் இருந்தபோதிலும், கடந்த இரண்டு நாட்களில் இந்த எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளன ” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
தொற்றாளர்கள் அதிகரிப்பதற்கான முக்கிய காரணம் சுகாதார வழிகாட்டுதல்களை புறக்கணிக்கும் வகையில் செயற்படும் மக்களின் பொறுப்பற்ற நடத்தையாகும்” எனவும் வைத்திய நிபுணர் குறிப்பிட்டார்.
கொவிட் பரவலை குறைப்பது மிகவும் முக்கியமானது என்றும், சுகாதார நடைமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிப்பதே அதற்கு ஒரே வழி என்றும் அவர் மேலும் வலியுறுத்தினார்.