February 22, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினைக்கு இந்த வரவு- செலவுத் திட்டத்தில் தீர்வு’: நிதி அமைச்சு

அதிபர்- ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினைக்கு இந்த வரவு- செலவுத் திட்டத்தில் தீர்வு வழங்குவதாக நிதி அமைச்சு உறுதியளித்துள்ளது.

பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ, நிதி அமைச்சர் பஸில் ராஜபக்‌ஷ மற்றும் அதிபர்- ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு இடையே பாராளுமன்றத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பள முரண்பாடுகளின் மூன்றில் ஒரு பகுதியை இந்த வரவு- செலவுத் திட்டத்தின் ஊடாக தீர்ப்பதாக நிதி அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

இதற்கு முன்னர் சம்பள முரண்பாடுகளின் மூன்றில் ஒரு பகுதியை, மூன்று கட்டங்களாக வழங்குவதாக அரசாங்கம் தெரிவித்திருந்தாலும், தொழிற்சங்கங்கள் அதற்கு உடன்படவில்லை.

கடந்த 24 வருடங்களாக நிலுவையில் உள்ள சம்பள முரண்பாட்டைத் தீர்க்கக் கோரி, ஆசிரியர் தொழிற்சங்கங்கள் தொடர் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளன.

இன்றைய கலந்துரையாடலில் அரசாங்கத்தின் அறிவிப்பு, அதிபர்- ஆசிரியர்களின் வெற்றியாகும் என்று தொழிற்சங்க பிரதிநிதி மகிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

நிலுவையில் உள்ள ஏனைய 2 பங்குகளையும் பெற்றுக்கொள்ள தாம் தொடர்ந்தும் போராடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தின் அறிவிப்பு செயற்படுத்தப்பட வேண்டும் என்றும் இன்றைய கலந்துரையாடல் குறித்த தமது நிலைப்பாட்டை பின்னர் அறிவிப்பதாகவும் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.