எரிபொருள் விலைகளை அதிகரிப்பதா? இல்லையா? என்பதனை நிதி அமைச்சே தீர்மானிக்கும் என்று வலுச் சக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
உலகச் சந்தையில் எரிபொருள் விலை உயர்வடைந்துள்ள போதும், இலங்கையில் அதன் விலையை அதிகரிக்காது பெருமளவான நஷ்டத்துடன் மக்களுக்கு அதனை வழங்கி வருவதாக அமைச்சர், இன்று கொழும்பில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பொன்றில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 6 மாத காலப்பகுதியில் உலக நாடுகளில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தக் காலப்பகுதியில் அதன் விலைகளை அதிகரிக்காத ஒரே நாடாக இலங்கை இருக்கின்றது என்றும் அவர் கூறியுள்ளார்.
ஏற்கனவே பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளமையில் மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள காரணத்தினால் எரிபொருள் விலைகளை இதுவரையில் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கவில்லை என்றும், எனினும் இது தொடர்பில் நிதி அமைச்சே தீர்மானம் எடுக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.