வவுனியா மாவட்டத்தின் இனப்பரம்பலை மாற்ற எடுக்கும் முயற்சிக்கெதிராக, மாபெரும் போராட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வவுனியா வடக்கு பிரதேச சபை தவிசாளர் தணிகாசலம் தெரிவித்தார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,
எதிர்வரும் 15 ஆம் திகதி காலை 10 மணியளவில்,நெடுங்கேணி நகரில் இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் இதில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
‘இன்று, எமது பாரம்பரிய பிரதேசத்தில் சிங்கள மக்களை குடியேற்றும் செயற்பாடுகள் தொடர்ச்சியாக நடைபெற்று கொண்டிருக்கும் வேளையில், அநுராதபுர மாவட்டத்தில் உள்ள மூன்று கிராம சேவையாளர் பிரிவுகளையும் வவுனியா மாவட்டத்துடன் இணைப்பதற்கான வேலைத்திட்டமானது எந்தவித கலந்துரையாடலுமின்றி பேரினவாதிகளால் மேற்கொள்ளப்படுகிறது.
இந்தச் செயற்பாடானது, மேலும் இனவிகிதாசாரத்தில் பாரிய மாற்றத்தை மிகத்துரித கதியில் நடைமுறைப்படுத்துவதற்கான ஓர் உத்தியாகவே நோக்க வேண்டியுள்ளது எனவும் அவர் கூறினார்.
எனவே இனப்பரம்பலை மாற்றும் அரசாங்கத்தின் செயற்பாட்டை கண்டித்தும் உரம் மற்றும் களைநாசினிகள் இன்மை ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு தீர்க்கப்படாமை, அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு போன்றவற்றை கண்டித்தும், இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது எனவும் அவர் கூறினார்.