July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘கடற்படையின் தொடர்ச்சியான கண்காணிப்பில் வடக்கு கடல் எல்லை’

தேச எல்லையைத் தாண்டி இலங்கைக்குள் உள்நுழையும் இந்திய மீனவர்களை கைது செய்யும் செயற்பாடுகள் மட்டுமல்ல அவர்களை விரட்டியடிக்கும் செயற்பாடுகளும் கடற்படையினரால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுவதாகவும், வடக்கு கடல் எல்லையை அதிகளவில் பலப்படுத்தி வைத்துள்ளதுடன், தொடர்ச்சியான கண்காணிப்பு செயற்பாடுகளில் இலங்கை கடற்படையினர் ஈடுபட்டு வருகின்றனர் எனவும் இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

தேச எல்லையை தாண்டும் எவரையும் கைது செய்யும் செயற்பாடுகளை ஒருபோதும் நாம் நிறுத்தவில்லை.எனினும் கடந்த கால கொவிட் நிலைமைகளில் எல்லை தாண்டும் இந்திய மீனவர்களை கைது செய்து இலங்கையில் தடுத்து வைக்கும் செயற்பாடுகளில் சவால்கள் காணப்பட்டன. குறிப்பாக டெல்டா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் நிலைமைகளை அடுத்து அவர்களை கைது செய்து இலங்கையில் தடுத்து வைக்க வேண்டாம் என சுகாதார தரப்பினர் இலங்கை கடற்படைக்கு ஆலோசனை வழங்கினர்.

இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக உள்நுழையும் மீனவர்களை விரட்டியடிக்கும் செயற்பாடுகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.அதுமட்டுமல்ல, இலங்கை கடற்படை அளவுக்கதிகமாக வடக்கு கடல் எல்லையை பலப்படுத்தி வைத்துள்ளதுடன், தொடர்ச்சியான கண்காணிப்பு செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேபோல் கடந்த ஆண்டில் இவ்வாறு கடல் எல்லையினூடாக சட்டவிரோதமாக போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் செயற்பாடுகளை இலங்கை கடற்படையினர் மேற்கொண்டுள்ளனர் என்றார்