
அறிவுறுத்தல்களை உதாசீனம் செய்து மற்றவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் செயற்படுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுதத்த ரணசிங்க தெரிவித்தார்.
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையை கருத்தில் கொண்டு எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ள அனர்த்த முகாமைத்துவ நிலையம், ஆயுதப் படைகள் மற்றும் பொலிஸார் தயாராக இருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அனர்த்தம் தொடர்பில் மக்களுக்கு அறிவிக்கப்பட்டவுடன் அங்கிருந்து வெளியேறுமாறும் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ள அவர், ஏறக்குறைய தேவையான அனைத்து முன் ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
காடுகளுக்குள் பயணித்தல், மலையேறுதல், ஆற்றில் குதித்தல், படகு சவாரி போன்ற பொழுது போக்கு நிகழ்வுகளை தவிர்க்குமாறு வலியுறுத்தியுள்ளதோடு, இந்த செயற்பாடுகள் உதவிக்கு வருபவர்களின் உயிருக்கும் ஆபத்தை விளைவிக்கும் என்பதையும் சுட்டிக்காட்டினார்.
தற்போதைய அனர்த்த நிலைமை மற்றும் தொற்றுநோய் நிலைமையை கருத்திற் கொண்டு தேவையற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என அவர் மேலும் வலியுறுத்தினார்.
இதனிடையே நாட்டில் அனர்த்த சூழ்நிலை காரணமாக கடந்த 24 மணித்தியாலங்களில் 09 நிவாரண நிலையங்களில் 63 குடும்பங்களைச் சேர்ந்த 251 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.