இலங்கையில் நீண்டகால முடக்கத்துடன் கொரோனா பரவல் கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டாலும், மீண்டும் வைரஸ் பரவல் அபாயம் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது.
நாட்டில் கடந்த சில தினங்களில் கொரோனா தொற்றுப் பரவல் ஐந்து வீத அதிகரிப்பை வெளிப்படுத்தியுள்ளதாக சுகாதார அமைச்சின் கொவிட் பரவல் செயற்பாடுகளின் பிரதான தொடர்பாளர் வைத்தியர், அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.
சுகாதார தரப்பின் அறிக்கையின் பிரகாரம் நாட்டில் வைரஸ் பரவல் நிலைமைகள் முழுமையாக கட்டுப்பாட்டில் வரவில்லை. இவ்வாறான மோசமான வைரஸ்கள் விரைவாக கட்டுப்பாட்டுக்குள் வரமாட்டாது என்பதை அவதானத்தில் கொள்ள வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் கொவிட் வைரஸ் பரவ ஆரம்பித்துள்ளதோடு, அடுத்த பாரிய அலையொன்று உருவாகிக்கொண்டிருப்பதாக உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
“இலங்கையில் தற்போது வரையில் டெல்டா வைரஸ் தொற்று பரவிக்கொண்டுள்ளது. கடந்த ஒன்றரை மாதங்கள் நாட்டை முடக்கி அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்ட வேளையில் டெல்டா வைரஸ் பரவலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடிந்தது.
ஆனால், கடந்த சில தினங்களில் மீண்டும் வைரஸ் பரவல் வேகம் அதிகரித்துள்ளது. குறிப்பாக கடந்த ஒரு வார காலத்திற்குள் ஐந்து வீதத்தால் கொவிட் வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது.
எனவே, எம் முன்னால் உள்ள அச்சுறுத்தல் நிலைமைகளைக் கருத்தில் கொண்டு, சகலரும் செயற்பட வேண்டும்”
என்று சுகாதார அமைச்சின் கொவிட் பரவல் செயற்பாடுகளின் பிரதான தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.