ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் பிரதான கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் ஆளும்தரப்பு பங்காளிக் கட்சிகளுக்கும் இடையில் முரண்பாடுகள் வலுப்பெற்றுள்ள நிலையில், 2022 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவு திட்டத்திலும் அரசாங்கதிற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஒரு தரப்பினர் வரவு- செலவு திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பிற்கு முன்னர் அரசாங்கத்தை விட்டு வெளியேறுவது குறித்து தீவிரமாக ஆராய்ந்து வருவதாகவும், ஏனைய பங்காளிக் கட்சிகளும் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஷவின் வரவு- செலவு திட்டத்தை எதிர்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாவும் தெரியவருகிறது.
வரவு- செலவு திட்டம் இந்த வாரம் வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ள நிலையில், பங்காளிக் கட்சிகளை சமாளிக்கும் விதமாக பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தலைமையில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கடந்த புதன்கிழமை அமைச்சர் விமல் வீரவன்சவுடன் தனிப்பட்ட பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருந்த பிரதமர், அரசாங்கத்தின் சில தீர்மானங்கள் குறித்து தாம் அதிருப்தி அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அதேபோன்று, பங்காளிக் கட்சிகளின் நிலைப்பாட்டை ஆதரித்துள்ள அவர், தற்போதுள்ள நெருக்கடி நிலைமைகளை சமாளிக்க தான் தலைமை தாங்குவதாகவும், ஜனாதிபதி மற்றும் நிதி அமைச்சருடன் பேச்சுவார்த்தைகளை நடத்த ஏற்பாடு செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.