July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குமாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியும் கையொப்பம்

உயர் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறைவாசம் அனுபவித்து வரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்  துமிந்த சில்வாவை விடுவிக்கக் கோரி, அரச தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்த மனுவில் தமிழ் முற்போக்குக் கூட்டணி உறுப்பினர்களும் கையொப்பமிட்டுள்ளனர்.

தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், பாராளுமன்ற உறுப்பினர்களான பழனி திகாம்பரம், இராதா கிருஷ்ணன், உதயகுமார் ஆகியோர் அந்த மனுவில் கையொப்பமிட்டுள்ளனர்.

மனோ கணேசன் விளக்கம்

இதனிடையே இதுபற்றி விளக்கமளிக்கும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், ”ஏற்கனவே துமிந்த சில்வா ஐந்து வருடங்கள் சிறையில் இருந்துள்ளார். அவர் அங்கே சீர்திருத்தத்துக்கு உள்ளாகியுள்ளார் என நம்புகிறேன். அவருக்கு திருந்தி, தனது சமூகத்துடன் வாழ சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என நான் எண்ணுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ”இந்த விவகாரம் தமிழ் கைதிகளின் பிரச்சினையையும் தேசிய அரங்குக்கு கட்டாயமாக கொண்டு வரும் எனவும் எதிர்பார்க்கின்றேன். இந்நிலையில், தமிழ் அரசியல்வாதிகளும், மனித உரிமையாளர்களும், இதை பயன்படுத்தி, நீண்டகால, தமிழ் கைதிகளின் பிரச்சினையையும் முன்னெடுக்க வேண்டும். அதற்கு எப்போதும் போல் நாம் ஒத்துழைப்பு வழங்குவோம்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆளும் கட்சி உறுப்பினர்கள் 50 க்கும் மேற்பட்டோர் கையொப்பம்

இதேவேளை, துமிந்த சில்வாவுக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு தெரிவித்து, அரசாங்கத்தின் 50 க்கு மேற்பட்ட உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளதாகவும், குறித்த கடிதம் எதிர்வரும் நாட்களில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவிடம் கையளிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிலர் கையொப்பமிடவில்லை

அத்துடன் மரண தண்டனை விதிக்கப்பட்ட  துமிந்த சில்வாவிற்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவில் கைச்சாத்திடவில்லை என்று ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.

ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களான கெஹெலிய ரம்புக்வெல, சுரேன் ராகவன், மகிந்த அமரவீர, விமல் வீரவன்ச, விதுர விக்கிரமநாயக்க ஆகியோரே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

       துமிந்த சில்வா

மரண தண்டனை விதிக்கப்பட்ட துமிந்த சில்வாவிற்கு பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் என அரச தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்திருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தது.

20ஆவது திருத்தத்திற்கான வாக்களிப்பிற்கு முன்னதாக பாராளுமன்றத்தில் இடம்பெற்ற அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர்களின் குழுக் கூட்டத்தில் இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது.

இதன்போது துமிந்த சில்வாவிற்கு பொதுமன்னிப்பை வழங்கவேண்டும் என வேண்டுகோள் விடுக்கும் மனுவொன்று பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டதாகவும், இதில் கையெழுத்திடுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

2011 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 08 ஆம் திகதி அங்கொடை, முல்லேரியா பகுதியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் தொழிற்சங்க விவகார ஆலோசகரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பாரத லக்‌ஷ்மன் பிரேமச்சந்திர உள்ளிட்ட நால்வரை சுட்டுக்கொலை செய்ததாக குற்றச்சாட்டை உறுதிப்படுத்திய உயர்நீதிமன்றம் துமிந்த சில்வா உள்ளிட்ட குற்றவாளிகளுக்கு 2016 ஆம் ஆண்டு  மரண தண்டனையை  விதித்து தீர்ப்பளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.