July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

3,000 ஏக்கர் காணி சுவீகரிப்பிற்கு எதிராக கொழும்பு பேராயர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்!

(file photo)

3,000 ஏக்கர் காணியை சுவீகரிப்பதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபை எடுத்த தீர்மானத்தை ரத்து செய்யுமாறு கோரி கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித் எழுத்தாணை மனு தாக்கல் செய்துள்ளார்.

முத்துராஜவெல ஈர வலயத்திலுள்ள காணிகளை நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் கொண்டு வந்து ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட வர்த்தமானியை வலுவிழக்கச் செய்து எழுத்தாணை பிறப்பிக்குமாறு இந்த மனுவில் கொழும்பு பேராயர் கேட்டுக் கொண்டுள்ளார்.

நீர்கொழும்பு, வத்தளை மற்றும் ஜா-எல பிரதேசங்களில் இவ்வாறு காணிகள் சுவீகரிக்கப்படுவதால் அப்பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படுவதோடு, அவர்களின் குடியிருப்பும் கடும் சவாலுக்கு உள்ளாகும் என கர்தினால் தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த மனுவில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, நகர அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் நாலக கொடஹேவ, சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர, நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர், மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர், வத்தளை, நீர்கொழும்பு மற்றும் ஜா-எல பிரதேச செயலாளர்கள் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.