May 11, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘சுவர்களில் சித்திரம் வரைந்த இளைஞர்கள் எம்மீது நம்பிக்கை வைத்து முன்வரவும்’: ஜனாதிபதி அழைப்பு

தான் ஜனாதிபதியாகப் பதவியேற்ற போது சுவர்களில் சித்திரம் வரைந்த இளைஞர்கள், மீண்டும் தன் மீது நம்பிக்கை வைத்து முன்வர வேண்டும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அழைப்பு விடுத்துள்ளார்.

“நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைத் திட்டத்தின்படி 100,000 கிலோ மீட்டர் வீதி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் பூர்த்தி செய்யப்பட்ட 1500 வீதிகளை ஒரே நாளில் திறந்து, மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வின் போதே, ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளையும் நாட்டு மக்களை நச்சுத் தன்மை அற்ற உணவுகளை வழங்கும் புரட்சிகர மாற்றத்தையும் தான் கட்டாயம் நிறைவேற்றுவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

சிலர் இராணுவ ஆட்சி புரியும் கோட்டாபய ராஜபக்‌ஷவை எதிர்பார்த்ததாகவும், தன்னால் அவ்வாறு நடந்துகொள்ள முடியுமாக இருந்தாலும், அதற்கான அவசியம் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

69 இலட்சம் பேர் வாக்களித்தது தனது முகத்துக்காக அன்றி, தான் முன்வைத்த கொள்கைகளுக்காக என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டை மூடும் போது திறக்கும்படியும் திறக்கும் போது மூடும்படியும் எதிர்க்கட்சி கோசம் எழுப்புவதாகவும் அதனால் நாட்டு மக்களின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

போலி குற்றச்சாட்டுகள் காரணமாக இலங்கை தொடர்ந்தும் ஜெனிவா செல்ல வேண்டி ஏற்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி கோட்டாபய தெரிவித்துள்ளார்.