July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஒரே பார்வையில் கொரோனா: இலங்கையின் இன்றைய நிலவரம்

மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை மற்றும் பேலியகொட மீன் சந்தையில் இருந்து உருவான கொரோனா தொற்று கொத்தனிகளால் நாடு பூராகவும் பல பிரதேசங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பெருமளவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.

இதன்படி கடந்த நான்கு வாரங்களில் மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையுடன் தொடர்புடையதாக 3800 பேர் வரையிலானோரும், பேலியாகொட மீன் சந்தையுடன் தொடர்புடையதாக 1550 பேர் வரையிலானோரும் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக பீசீஆர் பரிசோதனைகள் மூலம் உறுதியாகியுள்ளது.

விசேட அதிரடிப்படை முகாம்கள் மூடப்பட்டன

பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் குழுவொன்று கொரோனா தொற்றுக்கு உள்ளானதைத் தொடர்ந்து மூன்று விசேட அதிரடிப்படை முகாம்கள் முடக்கப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

கம்பஹா மாவட்டத்தின் களனி பிரதேசத்திலும், கொழும்பு மாவட்டத்தில் ராஜகிரிய மற்றும் களுபோவில பிரதேசங்களிலும் அமைந்துள்ள விசேட அதிரடிப்படை முகாம்களே இவ்வாறு முடக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய பிரமுகர்களுக்கான பாதுகாப்புப் பிரிவின் 10 விசேட அதிரடிப்படையினர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நீதிமன்ற வழக்கு விசாரணைகள் ஒத்திவைப்பு

தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு காரணத்தால் கொழும்பு, புதுக்கடையில் உள்ள உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் ஆகியவற்றில் இன்று (26) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவிருந்த வழக்குகள் அனைத்து ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

உயர் நீதிமன்றத்தில் இன்று முதல் ஒரு வார காலத்திற்கான அனைத்து வழக்குகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவிருந்த அனைத்து வழக்குகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒத்திவைப்பட்ட வழக்குகளின் விசாரணை தினம் குறித்த தரப்பினருக்கு அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

கல்கிஸை நீதவான் நீதிமன்ற செயற்பாடுகள் ஸ்தம்பிதம்

இந்த நிலையில், கல்கிஸை நீதவான் நீதிமன்றத்துக்குள் கொரோனா தொற்றாளர் ஒருவர் வந்தமை தொடர்பான பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கை நிறைவடையும் வரை, சட்டத்தரணிகள் நீதிமன்றத்துக்கு வருகைத் தராமல் இருக்கவும் இன்றைய தினம் எடுத்துக் கொள்ளவிருந்த வழக்குகளை ஒத்தி வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவித்தல், நீதிமன்ற கட்டடத்தின் பிரதான வாயிலில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

நாடாளுமன்றம் தற்காலிகமாக மூடப்பட்டது

நாடாளுமன்றம் இன்றும்  நாளையும்  மூடப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளதுடன், ஊழியர்களை வீட்டில் தங்கியிருக்குமாறு அறிவுறுத்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கிருமி ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் இருதினங்களுக்கு மட்டுமே தற்காலிகமாக மூடப்பட்டிருக்கும் நாடாளுமன்றம் மீளவும் புதன்கிழமை (28) திறக்கப்படும்.

கொழும்பில் 210 பேருக்கு கொரோனா

நாட்டில் நேற்று அடையாளம் காணப்பட்ட 351 கொரோனா வைரஸ் தொற்றாளர்களில் 210 பேர் கொழும்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நாரஹேன்பிட்டிய பொலிஸ் வைத்தியசாலை, சீதுவ பொலிஸ், மிரிஹான பொலிஸ் நிலையங்களில் மூன்று பொலிஸாருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிலாபம் பொதுச் சந்தைக்கு பூட்டு

சிலாபம் நகரில் நடத்திச் செல்லப்பட்ட மீன் மற்றும் காய்கறி சந்தையை, நாளை தொடக்கம் ஒரு வாரத்துக்கு மூடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிலாபம் நகர சபையில் இன்று  நடைபெற்ற விசேட கூட்டத்திலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

பேலியகொட மீன் சந்தை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடைய நான்று தொற்றாளர்கள், சிலாபத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டையிலும் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்

ஹம்பாந்தோட்டை மீன்பிடி துறைமுகத்தின் மீனவர்கள் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

இதனையடுத்து, ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் நகருக்குள் நுழைவதற்கு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நேற்று 57 மீனவர்களுக்கு பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்ட போதே, இருவருக்கு ​தொற்று உறுதியாகியுள்ளது.

வர்த்தக நிலையங்களை திறக்க அனுமதி

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில் அத்தியவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்கு இன்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

காலை 8 முதல் இரவு 10 மணிவரையில் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்து கொள்வதற்கான வாய்ப்பு வழங்கப்படுவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்

காலி மாவட்டத்தில் 43 தொற்றாளர்கள்

பேலியாகொட மீன் சந்தை கொரோனா ​கொத்தணி காரணமாக, காலி மாவட்டத்தில் இதுவரை 43 கொரோனா தொற்றாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர்.

மாவட்ட ரீதியிலான தொற்றாளர்களின் எண்ணிக்கை

இதனை, காலி மாவட்ட தொற்று நோயியல் விசேட நிபுணர் வைத்தியர் வெனுரகே சிங்காரச்சி தெரிவித்துள்ளார்.

பலப்பிட்டிய சுகாதார வைத்திய பிரிவுக்குள் இதுவரை 32 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதில் 11 பேர் பேலியாகொட மீன்சந்தை தொற்றாளர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

316 பேர் இன்று வீடு திரும்பினர்

முப்படையினரால் நடத்தப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து மேலும் 316 பேர் இன்று வீடு திரும்பியுள்ளனர்.

அத்துடன், 73 நிலையங்களில் 8421 பேர் தற்போது தனிமைப்படுத்தலில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விளையாடத் தடை

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் பகுதிகளில் குழுவாக விளையாட்டுகளில் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் 64 பொலிஸ் பிரிவுகளில் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

கம்பஹா மாட்டத்தில் 37, குளியாப்பிட்டியவில் 5, கொழும்பு மாவட்டத்தில் 15 பொலிஸ் பிரிவுகள், களுத்துறையில் மூன்று பொலிஸ் பிரிவுகள், வெல்லம்பிட்டிய, கொத்தட்டுவ, முல்லேரியாவ மற்றும் வெலிக்கடை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

மலையகத்திலும் கொரோனா தொற்றாளர்கள்

கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கொட்டகலை சின்ன டிரேட்டன், வூட்டன் ஹில்ஸ், தலவாக்கலை தெவிசிறிபுர ஆகிய பகுதியைச் சேர்ந்தவர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.

இவர்கள் மூவரும் பேலியகொடை மீன் சந்தையில் தொழில் புரிந்த நிலையில் வீடு திரும்பியுள்ளனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனையின் போதே, வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து, கொட்டகலை நகரிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளதாக கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் ராஜமணி பிரசாந்த் தெரிவித்துள்ளார்.

கடலுக்குச் செல்ல மீனவர்களுக்கு அனுமதி

மீனவர்கள் காலி துறைமுகத்தின் ஊடாக, கடலுக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி, மீனவர்கள் இன்று முதல் தொழிலுக்குச் செல்லலாமென, காலி மீன்பிடி துறைமுக முகாமையாளர் நிரஞ்சன் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, கடந்த 21ஆம் திகதியிலிருந்து காலி மீன்பிடி துறைமுகம் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது.

மீன்களை விற்கமுடியாமல் மீனவர்கள் பாதிப்பு

மீன்பிடியுடன் தொடர்புடையதாக கொரோனா வைரஸ் தொற்று பரவிசெல்லும் நிலை காரணமாக மீன்பிடி சமூகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கைப் பொது மீனவர் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே படகுகள் மற்றும் களஞ்சியசாலைகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ள மீன்களை விற்க ஏற்பாடு செய்யுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஓட்டமாவடியில் 16 தொற்றாளர்கள்

மட்டக்களப்பு – கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள வாழைச்சேனை, ஓட்டமாவடி பிரதேசத்தில் மேலும் 16 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளதாக, இன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதனையடுத்து, தொற்றாளர் எண்ணிக்கை 27ஆக உயர்வடைந்துள்ளதாக, கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ஏ.லதாகரன் தெரிவித்தார்.

களுத்துறையில் 5 வைத்தியசாலைகள்

கொரோனா வைரஸ் தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக, களுத்துறை பிரதேச சுகாதார சேவை பணிப்பாளர் பிரிவிலுள்ள 5 வைத்தியசாலைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக, களுத்துறை மாவட்ட பொது சுகாதார பரிசோதகர் சமன் கீகனகே தெரிவித்துள்ளார்.

இதற்கமைய பண்டாரகம, இங்கிரிய, பிம்புர, மத்துகம, இத்தேபான ஆகிய 5 வைத்தியசாலைகளே இவ்வாறு கொரோனா சிகிச்சைக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

5 வைத்தியசாலைகளிலும் 240 நோயாளர்களுக்கான கட்டில்களும் ஏனைய வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

பொத்துவிலில் சுய தனிமைப்படுத்தல் ஊரடங்கு

கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள கொரோனா தாக்கத்தையடுத்து வாழைச்சேனை மற்றும் பொத்துவில் பிரதேசங்களில் சுயதனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் உள்ளது.

ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள இடங்களில் இராணுவத்தினர் பொலிஸாரின் பாதுகாப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. பிரதானவீதிகள் வெறிச்சோடிக்காணப்படுகின்றன.

வாழைச்சேனையில் 27 பேரும் பொத்துவிலில் 5 பேரும் கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து, இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கற்பிட்டி மரணத்துக்கு கொரோனா காரணமல்ல

கற்பிட்டி பகதியில் கடந்த 24ஆம் திகதி உயிரிந்த 32 வயது நபரின் மரணமானது கொரோனா வைரஸ் பரவலால் ஏற்பட்டதல்ல என புத்தளம் மற்றும் கற்பிட்டி பிரதேசத்துக்கான திடீர் மரண விசாரணை அதிகாரி பீ.எம்.ஹிசாம் தெரிவித்துள்ளார்.

குறித்த மரணம் கொரோனா வைரஸால் ஏற்பட்ட மரணம் என வதந்திகளை பரப்பிய மக்கள் மத்தியில் அச்சத்தை தோற்றுவித்துள்ளதாகவும், இவ்வாறான நடவடிக்கைகளில் எவரும் ஈடுபட வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.