நாட்டில் உள்ள அப்பாவி ஓய்வூதியக்காரர்களின் ஓய்வூதிய சம்பளத்தை தன்னிச்சையாக கொள்ளையடிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றம்சாட்டியுள்ளார்.
ஓய்வூதியக்காரர்களின் பணத்தை அக்ரஹார காப்பீட்டில் வரவு வைக்கும் போர்வையில் கொள்ளையடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த சம்பள துண்டிப்பை மேற்கொள்வதற்கு ஓய்வூதிய சமூகம் இரண்டு வாரங்களுக்குள் விருப்பமா இல்லையா என்பதைக் குறிப்பிடத் தவறினால், அரசாங்கம் அந்தப் பணத்தைக் குறைத்துக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
“அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடனே பணக்கார குபேரர்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் வரிச்சலுகையை வழங்கிய வன்னம் அரச வருவாயை முற்றிலுமாக இழந்த அரசாங்கம், இதன் இழப்பை ஈடுகட்ட முயல்வது இந்த நாட்டிற்காக தங்கள் கடின உழைப்பையும் அறிவையும் அர்ப்பணித்து நாட்டிற்கு பல ஆண்டுகளாக சேவை செய்து, ஓய்வு பெற்ற சிரேஷ்ட பிரஜைகளிடமிருந்து தான்.
இந்த கொடூர செயலுக்கு எதிராக நிபந்தனையின்றி நடவடிக்கை எடுப்போம்.
அக்ரஹார காப்பீட்டை வலுப்படுத்துவது என்ற போர்வையின் பெயரில் சூட்சமமாக இந்த நாட்டில் உள்ள இலட்சக்கணக்கான ஓய்வூதியக்காரர்களின் ஓய்வூதியத்தை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
01.01.2016 க்கு முன்னர் ஓய்வுபெற்ற 70 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் இருந்து 600 ரூபாய் குறைப்பதற்கும், 70 வயதுக்குட்பட்டவர்களிடம் இருந்து 400 ரூபாய் குறைப்பதற்கும் அரசாங்கம் ஒக்டோபர் 29 ஆம் திகதி சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது”
என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.