அடுத்த வாரம் முன்வைக்கப்படவுள்ள அரசாங்கத்தின் வரவு- செலவு திட்டத்தில் மக்களை ஏமாற்றும் பொய்கள் மட்டுமே சபையில் முன்வைக்கப்படும்.ஆனால் வெகு விரைவில் பொருளாதார ரீதியாகவும், சர்வதேச ஆக்கிரமிப்பு சார்ந்த அழுத்தங்கள் மற்றும் பாரிய நெருக்கடி நிலைமைகளுக்கு முகங்கொடுக்க நேரிடும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
மிகப்பெரிய நெருக்கடி நிலையொன்று நாட்டில் உருவாகியுள்ளது. பொருளாதார ரீதியிலும், தேசிய பாதுகாப்பு ரீதியிலும், நோய் தாக்கங்கள் போன்ற தொற்று நோய்கள் காரணமாகவும் பல பிரச்சினைகள் நாட்டில் எழுந்துள்ளன. இவற்றை அரசாங்கம் கையாள்வதில் பாரிய பின்னடைவுகளை சந்தித்துள்ளது என்பதும் வெளிப்பட்டுள்ளது.
அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு, இறக்குமதி பொருட்களை தேவைக்கேற்ப இறக்குமதி செய்ய முடியாத நிதி பற்றாக்குறை, உரம் மற்றும் மருந்துகளை இறக்குமதி செய்ய முடியாத நிலை, தரமான பொருட்களுக்கு பதிலாக மோசமான மற்றும் நாட்டுக்கும் மக்களுக்கும் ஒவ்வாத பொருட்களை இறக்குமதி செய்யும் நிலை என பல்வேறு சிக்கல்கள் காணப்படுகின்றன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேசத்தின் அழுத்தமும், ஆதிக்கமுமே இதற்கு காரணமாகும்.ஹம்பாந்தோட்டை துறைமுகம், போர்ட் சிட்டி, கொழும்பு துறைமுகத்தின் ஒரு பகுதி, மத்தள விமான நிலையம் ஆகியவற்றை சீனா ஆக்கிரமித்துள்ளது. திருகோணமலை எண்ணெய் குதங்கள், கொழும்பு துறைமுகத்தின் ஒரு பகுதியை,கெரவலப்பிட்டிய மின் நிலையத்தின் எரிவாயு பரிவர்த்தனை ஆகியவற்றை இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் ஆக்கிரமிக்க முயற்சிக்கின்றன.இவற்றை கையாள தெரியாது அரசாங்கம் இலங்கையின் வளங்களை தாரைவார்த்துக் கொண்டுள்ளது.
வெளிநாட்டுக் கொள்கை முறையாக பின்பற்றப்பட வேண்டும், ஆனால் ஒரு நாட்டின் ஆதிக்கம் முழுமையாக இருக்கும் விதமாகவோ அல்லது ஏனைய நாடுகளை பகைத்துக் கொள்ளும் விதத்திலோ கொள்கைகளை கையாளக்கூடாது. அதேபோல், நாடுகளை திருப்திப்படுத்த, கடன்களை பெற்றுக் கொள்ள இலங்கையின் வளங்களை விற்கவும் கூடாது.இது முறையான வெளிநாட்டுக் கொள்கை அல்ல.
இது தொடர்ந்தால் இறுதியாக இலங்கை என்ற நாடே மிஞ்சாது. அதுமட்டுமல்ல நாட்டின் வளங்களை கைப்பற்றும் நாடுகளே நாளை இலங்கையின் அரசியல் மாற்றத்தையும் தீர்மானிக்கும். அதற்கு இடம் வழங்கப்படக்கூடாது. ஆனால் அரசாங்கம் இவற்றை கருத்தில் கொள்வதாக தெரியவில்லை எனவும் குறிப்பிட்டார்.