லிட்ரோ எரிவாயு நிறுவனத்திற்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் காரணமாக நாட்டில் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு நிலவியதாக “லிட்ரோ எரிவாயு” நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்க தெரிவித்தார்.
தமது நிறுவனத்திற்கு எரிவாயு வழங்கும் சர்வதேச நிறுவனத்தினால் ஏற்கனவே அமுலில் உள்ள ஒப்பந்தத்தை மேலும் இரண்டு வருடங்களுக்கு நீடிக்குமாறு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
இதனை முன்னிறுத்தியே நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட எரிவாயு கப்பல் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு தமது நிறுவனத்தை அச்சுறுத்தியதாக அவர் கூறுகின்றார்.
எனினும் தற்போது அமுலில் உள்ள ஒப்பந்தத்தை மேலும் இரண்டு வருடங்களுக்கு நீடிக்க நேர்ந்தால் நாட்டுக்கு 10 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டிருக்கும் எனவும் லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
28.02.2020 அன்று கையொப்பமிடப்பட்டுள்ள இந்த ஒப்பந்தம் 2022.02.28 அன்று காலாவதியாவதாக சுட்டிக்காட்டிய அவர், இந்த ஒப்பந்தம் தாம் “லிட்ரோ எரிவாயு” நிறுவனத்தின் தலைவராக பொறுப்பேற்க முன்னர் இருந்த தலைவரினால் கைச்சாத்திடப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
இந்த ஒப்பந்தத்தால் சர்வதேச அளவில் எரிவாயுவை மலிவான விலைக்கு வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
நாட்டில் எரிவாயு சந்தையை ஒரு மாபியா குழு கட்டுப்படுத்துவதாக தெரிவித்த அவர், அந்த குழுவை தவிர வேறு எவரும் எரிவாயுவை இறக்குமதி செய்ய முடியாது எனவும் கூறினார்.