
அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை செந்நெல் கிராம் பகுதியில் பிறந்து மூன்று நாட்களேயான குழந்தையை கொலை செய்து புதைத்த குற்றச்சாட்டில் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் குழந்தையின் தாயான 19 வயது யுவதியும் அந்த யுவதியின் 40 வயதான தந்தையுமே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஒக்டோபர் 25 ஆம் திகதி குறித்த யுவதிக்கு குழந்தை பிறந்துள்ளதுடன், அதனை 28 ஆம் திகதி கிட்டங்கி ஆற்றங்கரையில் புதைத்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்மாந்துறைப் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து கடந்த 3 ஆம் திகதி சந்தேக நபர்கள் இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பின்னர் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளுக்கமைய குழந்தையின் சடலம் இன்று காலை தோண்டியெடுக்கப்பட்டதுடன், அது பிரேத பரிசோதனைக்காக அம்பாறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இதேவேளை சந்தேகநபர்கள் சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுக்கமைய 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.