ஆய்வுகளின் அடிப்படையில் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மாத்திரமே உள்ளூர் இழுவை வலை படகுகள் தொழிலில் ஈடுபட வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
குருநகர் கடற்றொழிலாளர் சங்கத்தின் உறுப்பினர்களை சந்தித்த போதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு கூறியுள்ளார்.
குருநகர் பிரதேசத்தில் சுமார் 400 உள்ளூர் இழுவைப் படகுகள் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மீனவர்கள் குழுவொன்று உள்ளூர் இழுவைப் படகுகள் தடை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.
இவ்வாறான நிலைமையில் இன்றைய தினத்தில் குருநகர் கடற்றொழிலாளர்களை சந்தித்த விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இலங்கையின் கடல் வளத்தை அழிக்கின்ற அடிமட்ட இழுவை வலைப் படகுகளை எந்தக் காரணத்திற்காகவும் அனுமதிக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தற்போது இழுவை வலைப் படகுகளை பயன்படுத்துகின்ற உள்ளூர் கடற்றொழிலாளர்கள், கடலின் அடித்தளத்தினை பாதிக்காத வகையில் ‘நாரா’ நிறுவனத்தினால் அடையாளப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் மாத்திரம் தொழிலில் ஈடுபட முடியுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.