
கொழும்பின் புறநகர் பகுதியான சபுகஸ்கந்த, மாபிம பிரதேசத்தில் பயணப் பையொன்றில் இருந்து மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு, மாளிகாவத்தை பிரதேசத்திலுள்ள மாடிக் குடியிருப்பு தொகுதியொன்றில் வசித்த 44 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மாபிம பிரதேசத்தில் குப்பைகள் கொட்டும் இடமொன்றில் இருந்த பயணப் பையொன்றினுள் இருந்து கைகள், கால்கள் கட்டப்பட்ட நிலையில் குறித்த சடலம் நேற்று கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பில் விசாரணைகளை நடத்தி வந்த பொலிஸார், அந்தச் சடலம் யாருடையது என்பதனை உறுதிப்படுத்தியுள்ளதாக இன்று அறிவித்துள்ளனர்.
இதனுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.