‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணியில் தமிழர்களை உள்வாங்குவது குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
“ஒரே நாடு, ஒரே சட்டம்” ஜனாதிபதி செயலணியின் நியமனம் குறித்து முரண்பாடுகள் எழுந்துள்ளன. ஆனால் இந்த செயலணி குறித்து எவரும் அச்சம் கொள்ளத்தேவையில்லை. இது ஒரு கண்காணிப்பு செயலணி மட்டுமே என்றும் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் சட்டவாக்க அதிகாராம் இந்த செயலணியிடம் வழங்கப்படாது. நாட்டின் அரசியலமைப்பு உருவாக்கம் குறித்து பாராளுமன்றத்தில் மட்டுமே தீர்மானிக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல் செயலணியில் தமிழர்கள் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். அதனை வேண்டுமென்றே அரசாங்கம் நிராகரிக்கவில்லை. இப்போதும் அரசாங்கத்தில் இந்த விடயங்கள் ஆராயப்பட்டு வருகின்றன. தமிழர் பிரதிநிதிகளை நியமிக்கும் கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. விரைவில் இதற்கு தீர்வுகள் கிடைக்கும் என அமைச்சர் பந்துல குணவர்தன கருத்து வெளியிட்டுள்ளார்.
இதேவேளை இப்போதுள்ள நிலையில் நாட்டின் பொருளாதார செயற்பாடுகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். நாடாக நாம் பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளோம். இந்த நெருக்கடி நிலைமைகளில் இருந்து விடுபட வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் கட்சிகளும் எம்முடன் இணைய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.