July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘ஈஸ்டர் தாக்குதல் பிரதான சூத்திரதாரிகளை கடுமையாக தண்டித்தாலே நீதி கிடைக்கும்’

“உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலில் பலியானவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமானால் இந்தத் தாக்குதலுக்கு மூலகாரணமாக செயற்பட்டவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும்” என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கும் இடையிலான சந்திப்பு இன்று (04) காலை கொழும்பில் உள்ள பேராயரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.

அதன்பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

“உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுக்கு பின்னர், சதிகாரர்கள் பல்வேறு சதித்திட்டங்களை ஆரம்பித்து, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.

தாக்குதல் நடத்தப்பட்ட தேவாலயங்களை உடனடியாக புனரமைக்க நல்லாட்சியில் நாம் நடவடிக்கை எடுத்திருந்தோம்.
தாக்குதலுக்கு காரணமானவர்கள் குறித்து விசாரணை நடத்தி குற்றவாளிகள் கைது செய்து கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.எனினும், அரசு அவ்வாறு செய்யாமல் பல்வேறு சதிகளை மேற்கொண்டு வருகின்றது.

எமக்கும் புலனாய்வுப் பிரிவின் பிரதானிக்கும் இடையில் எந்தத் தொடர்பும் இல்லை.அவர்களின் ஆலோசனைகளை ஏற்று அரசியலில் ஈடுபடும் பழக்கம் எமக்கு இல்லை.இந்தத் தாக்குதலின் உண்மை நிலைமையை நாட்டுக்கு வெளிப்படுத்தும் வரை இது தொடர்பில் திருப்தியடைய முடியாது.

தாக்குதலில் பலியானவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமானால் இந்தத் தாக்குதலுக்கு மூல காரணமாக செயற்பட்டவர்களை கடுமையாகத் தண்டிக்க வேண்டும். அதற்காக ஐக்கிய மக்கள் சக்தி நிபந்தனைகள் இன்றி முன்வரும்” என்று தெரிவித்தார்.