கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையம் தொடர்பான ஒப்பந்தம், சட்டமா அதிபரின் அனுமதியை அடுத்து, அமெரிக்காவை தளமாக கொண்ட (New Fortress Energy) நிறுவனத்துடன் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் தலைவர் பெர்டினாண்டோ தெரிவித்தார்.
இந்த ஒப்பந்தத்திற்கு சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரின் ஒப்புதலும் கிடைத்துள்ளதாகவும், முழுமையான ஆய்வுக்கு பிறகே சட்டமா அதிபர் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் பெர்டினாண்டோ சுட்டிக்காட்டினார்.
எனினும் எம்.சி.சி ஒப்பந்தத்தின் படி, இரு தரப்பினரின் அனுமதியின்றி அதை வெளியிடக்கூடாது என்ற நிபந்தனையின் காரணமாக இந்த உள்ளடக்கத்தை வெளியிட முடியாது என்று பெர்டினாண்டோ குறிப்பிட்டார்.
இந்த ஒப்பந்தம் இதுவரை இலங்கை மின்சார சபையிடம் சமர்ப்பிக்கப்படவில்லை, இந்த ஒப்பந்தத்தின் உள்ளடக்கம் வெளியிடப்பட்டால், அரசுக்கு ஏதேனும் பிரச்சினை ஏற்படுமா என்பது குறித்து, சட்டமா அதிபரிடம் ஆலோசிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
இது ஒரு வர்த்தக ஒப்பந்தம் என்றும், அங்கீகாரம் இல்லாதவர்கள் இதுபோன்ற ஒப்பந்தங்களை பெற்றால் எதிர்மறையான விளைவுகள் ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
எனினும் அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் சட்டமூல ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாகவும், உடன்படிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.