வர்த்தகம், சுற்றுலா, கல்வி உள்ளிட்ட பல துறைகளின் மேம்பாடு தொடர்பில், உலக நாடுகளின் அரச தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ கலந்துரையாடியுள்ளார்.
க்ளாஸ்கோ நகரில் நடைபெறும் பருவநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் அரச தலைவர்களின் மாநாட்டில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ கலந்து கொண்டுள்ளார்.
இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் பஹரேன் இளவரசரும் பிரதமருமான சல்மான் பீன் ஹமாட் கலீபாவுக்கும் (Salman Bin Hamad Alkhalifa) இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன்போது இலங்கை மற்றும் பஹரேன் நாடுகளுக்கு இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் பலப்படுத்துவது தொடர்பில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
இத்தோடு இலங்கையர்களுக்கு அந்நாட்டில் பல்வேறு துறைகளில் தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பது உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டது.
இதேவேளை, நேபாள பிரதமர் பகதூர் தெவ்பாவுடன் ஜனாதிபதி மேற்கொண்ட சந்திப்பின் போது, இலங்கைக்கும் நேபாளத்துக்கும் இடையில், விமானப் பயண எண்ணிக்கையை அதிகரித்தல் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான சுற்றுலா, கல்வித் துறைகளின் மேம்பாடுகள் தொடர்பில் பேசப்பட்டது.
பொதுநலவாய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பெட்ரிஷியா ஸ்கொட்லாண்ட் (Patricia Scotland) அம்மையாருடன் இடம்பெற்ற சந்திப்பின் போது அதன் உறுப்பு நாடுகளின் சந்தை வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக, அம்மையார் ஜனாதிபதியிடம் தெரிவித்தார்.
இக்கலந்துரையாடல்களில் வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் சரோஜா சிறிசேன ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.