உலகலாவிய இந்துக்கள் தீபாவளித் திருநாளைக் கொண்டாடும் நிலையில், இலங்கையின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
அறியாமை இருளகற்றி மனதை ஒளிரச் செய்யும் ஞான ஒளியேற்றலையே தீபாவளித் திருநாள் குறிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்துக்களின் ஆன்மீக வழிபாடாகவும் பாரம்பரிய கலாசாரப் பெருவிழாவாகவும் காணப்படும் தீபாவளித் திருநாள் மூலம் வாழ்வின் துன்பங்கள் நீங்கி இன்பங்களை அடைந்துகொள்வோம் என்று ஜனாதிபதி பிரார்த்தித்துள்ளார்.
இந்தத் தீபத்திருநாள், அறத்தின் ஆட்சியையும் ஆணவத்தின் வீழ்ச்சியையும் குறிக்கின்ற நாளாகும் என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
தீபாவளித் திருநாளில் பிரபஞ்சத்துக்கு பிரவேசமாகும் சுப சக்தியால் உலக மக்கள் யாவருக்கும் மகிழ்ச்சி, சௌபாக்கியம், செல்வம் மற்றும் தெய்வ அருள் கிடைக்கவேண்டும் என்று அவர் வாழ்த்தியுள்ளார்.
பிரதமர் மகிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ ஆகியோரும் தீபாவளியைக் கொண்டாடி, நாட்டு மக்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
அனைவரதும் அபிலாஷைகளும் நிறைவேறி, இலங்கைத் திருநாடு சுபீட்சம் மிக்கதோர் தேசமாக மலரும் நல்லதோர் எதிர்காலத்தின் ஆரம்ப நாளாக இந்த தீபாவளித் திருநாள் அமையட்டும் என்று பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.