கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து நவம்பர் மாதம் முதல் சீஷெல்ஸுக்கு சிறப்பு விமானங்களை இயக்க “ஏர் சீஷெல்ஸ்” நிறுவனம் தீர்மானித்துள்ளதாக விமான நிலையத்தின் மூத்த அதிகாரி தெரிவித்தார்.
இதன்படி,முதலாவது விமானம் நவம்பர் 6 ஆம் திகதி காலை 9 மணிக்கு சீஷெல்ஸிலிருந்து கொழும்புக்கு பயணிக்க உள்ளதோடு, நவம்பர் 6 ஆம் திகதி மாலை 3.45 மணிக்கு மீண்டும் கொழும்பில் இருந்து சீஷெல்ஸுக்கு பயணிக்க உள்ளது.
அதேபோல் அடுத்த விமானம் நவம்பர் 18 ஆம் திகதி சீஷெல்ஸிலிருந்து காலை 9 மணிக்கு கொழும்பு வந்து நவம்பர் 18 ஆம் திகதி கொழும்பில் இருந்து மாலை 5.45 மணிக்கு சீஷெல்ஸ் தீவுகளுக்கு புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீஷெல்ஸுக்கு சுற்றுலா பணயம் மேற்கொள்வதற்கு இந்த மகத்தான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு இலங்கையர்களை “ஏர் சீஷெல்ஸ்” அழைப்பு விடுத்துள்ளது.
சீஷெல்ஸ் குடியரசு, (Seychelles) இந்தியப் பெருங்கடலில் அமைந்திருக்கும் ஒரு தீவு நாடு ஆகும். இது கிழக்கு ஆபிரிக்காவிலிருந்து சுமார் 1,500 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
சீஷெல்ஸ் குடியரசிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர், அந்நாட்டு போக்குவரத்து அமைச்சர் அந்தோனி டெர்ஜாக்ஸுடன், சீஷெல்ஸில் போக்குவரத்து துறைக்கான வாய்ப்புகள் குறித்து அண்மையில் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.