இலங்கையில் இதுவரை அமுலில் இருந்த சீனிக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதன்படி, நாளை (03) முதல் சீனிக்கான மொத்த விற்பனை விலை கிலோ ஒன்றுக்கு 135 ரூபா முதல் 140 ரூபா வரை இருக்கும் எனவும் சில்லறை விற்பனை விலை 150 ரூபா ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, துறைமுகத்தில் 976 கொள்கலன்களில் அத்தியாவசியப் பொருட்கள் விடுவிக்கப்படாது உள்ளன என இலங்கை சீனி இறக்குமதியாளர்கள் சங்கத்தின் உப தலைவர் நிஹால் செனவிரத்ன தெரிவித்தார்.
இவற்றில் காணப்படும் சீனி கொள்கலன்களை விடுவிப்பதற்கு தேவையான அமெரிக்க டொலர்களை வழங்க நிதியமைச்சர் இணங்கியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, அதிகரித்து வரும் அரிசி விலையை கட்டுப்படுத்தும் வகையில் அரிசி இருப்புக்களை இறக்குமதி செய்ய நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸ தலைமையிலான வாழ்க்கைச் செலவுக் குழு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.