July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘வாக்களித்த மக்கள் துன்பத்தில் இருப்பதை பொதுஜன பெரமுன புரிந்துகொள்ள வேண்டும்’- பிரதமர் மகிந்த

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு வாக்களித்த மக்கள் தற்போது மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் உள்ளதை புரிந்துகொள்ள வேண்டும் என்று பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ குறிப்பிட்டுள்ளார்.

‘பெருமையுடன் சுபீட்சத்தை நோக்கி’ எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஐந்தாவது தேசிய மாநாட்டில் உரையாற்றும் போதே, பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மக்களின் பிரச்சினைகளை எதிர்கொள்ளக்கூடிய அரசியலை பொதுஜன பெரமுன முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இக்கட்டான சூழ்நிலைகளில் ஒரே நோக்கத்துடன் போராடிய கட்சிகள் பெரிதாயினும், சிறிதாயினும் அவற்றை பொதுஜன பெரமுனவில் இருந்து பிரிக்க முடியாது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சுவரில் ஓவியங்கள் வரைந்த இளைஞர்கள் இன்று நாட்டை விட்டு வெளியேறுவதற்காக கடவுச்சீட்டு பெறுவதற்கான வரிசையில் நிற்பார்களாயின், அவர்களை கண்டறிந்து மீண்டும் இந்நாட்டுக்கு அழைத்துவரும் வகையிலான அரசியலில் ஈடுபடுங்கள் என பொதுஜன பெரமுனவிடம் பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தம்மை சிறையில் அடைத்தாலும் மக்களை குழப்பி, போராட்டங்களை செயற்படுத்தி மக்களை இருளில் மூழ்க வைக்க தாம் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ், முஸ்லிம்களை இணைத்துக்கொள்ள முடியுமாயின், அதுவே பொதுஜன பெரமுனவினால் செய்யக்கூடிய சிறந்த செயல் என்று மகிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.