
இலங்கை மீண்டும் கொவிட் மாறுபாடு காரணமாக அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
எனினும் நாட்டில் ஜூன் மாதத்திலிருந்து இனங்காணப்பட்ட டெல்டா 28 வைரஸ் வகை காரணமாகவே இந்த எச்சரிக்கை நிலைமை தோன்றியுள்ளதாகவும் டெல்டா 30 என்ற வைரஸ் வகையினால் அல்ல எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
அத்தோடு, இலங்கையில் சமீபத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள டெல்டா 30 வைரஸ் வகை, உலகில் சமீபகாலமாக எங்குமே கண்டறியப்படவில்லை எனவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
தடுப்பூசிகளின் செயல் திறனை தோற்கடிக்க கூடிய A30 எனப்படும் டெல்டா வைரஸ் தொடர்பாக நாடு விழிப்புடன் இருக்க வேண்டும் என சில அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், ஏற்கனவே தீவிரமடைந்த A28 வைரஸ் நாட்டில் இன்னும் இருப்பதால், அது மேலும் ‘மோசமானதாக’ மாறக்கூடிய அச்சுறுத்தல் இருப்பதாகவும் இது தொடர்பில் மக்கள் அதிக கவனத்துடன் செயற்பட வேண்டும் எனவும் நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
“உலகில் ஏறக்குறைய 5 நோயாளிகள் மட்டுமே A30 நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும் ஜூன் மாதத்திலிருந்து எந்த நாட்டிலும் அதுதொடர்பான சம்பவங்கள் பதிவாகவில்லை” எனவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதனிடையே, இலங்கையில் இன்றுவரை A30 வகை டெல்டா வைரஸ் வகை கண்டறியப்படவில்லை என பேராசிரியர் நீலிகா மாளவிகே தெரிவித்தார்.
டெல்டா மாறுபாட்டின் பிறழ்வான A28 இன் மாதிரி, மேலதிக சோதனைகளுக்காக நேற்று ஹொங்கொங்கிற்கு அனுப்பப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.
டெல்டா பிளஸ் தற்போது 29 நாடுகளில் பரவியுள்ள போதிலும், இலங்கையில் இதுவரை கண்டறியப்படவில்லை. எனினும் நாட்டில் ஏற்கனவே உள்ள மாறுபாடுகள் மேலும் பிறழ்வடைந்து சிக்கலை தோற்றுவிக்கலாம் என நிபுணர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.