கெரவலபிட்டிய ஒப்பந்தத்தை நிறுத்துவதற்கு அமெரிக்க தூதரகம் தலையிட வேண்டும் என்று இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் தொழிற்சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
அமெரிக்க தூதரகத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்தே, இவ்விடயத்தை குறித்த தொழிற்சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
விலைமனுக் கோரல் நடைமுறைகளை மீறும் வகையில் அமெரிக்காவின் நியூ போட்ரஸ் நிறுவனத்துக்கு யுகதனவி மின்னுற்பத்தி நிலையத்தின் பங்குகளை விற்பனை செய்யும் ஒப்பந்தம் நிறுத்தப்பட வேண்டும் என்று தொழிற்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
அமெரிக்க நிறுவனத்தை மகிழ்விக்கும் அரசாங்கத்தின் தீர்மானம் தேசிய கொள்கையை மீறுவதாக தொழிற்சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
விலைமனு கோரப்படாத முன்மொழிவை அரசாங்கத்துக்கு சமர்ப்பிப்பதில் அமெரிக்கத் தூதரகம் தொடர்புபட்டதால், அமெரிக்காவின் நற்பெயரை மோசமாகப் பாதிக்கும் என்று இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.