November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“நாட்டில் கொரோனா தொற்று இன்னும் அதிகமாக பரவி வருகிறது” – இராணுவ தளபதி எச்சரிக்கை!

“சில கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ள போதிலும், நாட்டில் கொரோனா தொற்று நோய் இன்னும் அதிகமாக பரவி வருவதால் மக்கள் சிந்தித்து செயற்பட வேண்டும் ” என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

நாரஹேன்பிட்டி இராணுவ வைத்தியசாலையில் இராணுவத்தினருக்கு  பூஸ்டர் தடுப்பூசியை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.

அன்றாடம் 500 – 600 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படும் நிலையில், பொது மக்கள் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும்.

இல்லையெனில் எதிர்காலத்தில் கொரோனா தொற்றாளர்களது எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும்  என அவர் குறிப்பிட்டார்.

“மக்களின் வாழ்க்கையை கருத்தில் கொண்டு மாகாணங்களுக்கு இடையேயான கட்டுப்பாடுகள் உட்பட பல்வேறு கட்டுப்பாடுகளை நீக்குவதற்கான முடிவு எடுக்கப்பட்டது” என்றார்.

எனவே, மக்கள் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும் என கொரோனா  தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவர், இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

இதனிடையே கொவிட் தடுப்பூசிகளுக்கு எதிராக செயற்பட கூடிய A.30 என்ற புதிய வகை இலங்கைக்குள் நுழையும் அபாயம் இருப்பதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் இன்று (01) தெரிவித்துள்ளது.

உலக நாடுகளில் முன்னர் கண்டறியப்பட்ட அனைத்து கொவிட் வைரஸ் வகைகளும் குறுகிய காலத்திற்குள் இலங்கையில் கண்டறியப்பட்டன. அதேபோல், இந்த மாறுபாடும் நாட்டிற்குள் வரும் வாய்ப்பு உள்ளதாக சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன கூறினார்.

கொவிட் பரவலை கட்டுப்படுத்துவதற்காக முயற்சித்து வரும் நிலையில், புதிய மாறுபாடு நாட்டிற்குள் நுழைந்து பரவத் தொடங்கினால் நிச்சயமாக ஒரு பேரழிவை ஏற்படுத்தும் என அவர் எச்சரிக்கை விடுத்தார்.