July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘ஒரே நாடு- ஒரே சட்டம்’ செயலணியில் தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகளின் நியமனம் அவசியமற்றது: ஞானசார தேரர்

‘ஒரே நாடு- ஒரே சட்டம்’ செயலணியில் தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகளின் நியமனம் அவசியமற்றது என்று செயலணியின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

‘ஒரே நாடு- ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணி குறித்து விளக்கம் அளிப்பதற்காக ஜனாதிபதி ஊடக நிலையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது, செயலணிக்கு தமிழ் உறுப்பினர்கள் நியமிக்கப்படாமை குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

தமிழ் உறுப்பினர்களின் நியமனத்தில் சிக்கல் இருப்பதாகவும் குறித்த நியமனங்கள் குறித்து பரிசீலனை செய்யப்படும் என்றும் தேரர் குறிப்பிட்டுள்ளார்.

முஸ்லிம்களின் சில சட்டங்களில் சிக்கல் இருப்பதால் முஸ்லிம் பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சிங்கள, தமிழ், முஸ்லிம் என்றோ பௌத்த, கத்தோலிக்க, இந்து அல்லது இஸ்லாம் என்றோ பிரியாது, அனைத்து இனங்களையும் ஒன்றிணைக்கும் சட்டத்தை உருவாக்குவதே தமது நோக்கம் என்று ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான ஜனாதிபதி செயலணி ஒன்று நியமிக்கப்பட்டது காலப் பொருத்தமானது என்றும் இதன் பணிகள் சவால்மிக்கது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் பல்வேறு பிரிவினரும் பல்வேறு சட்டங்களை உருவாக்கிக்கொள்ள முயற்சிப்பதாகவும், ஒரு நாடு என்றால் ஒரு சட்டம் இருக்க வேண்டும் என்று ஞானசார தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டில் பல்வேறு சட்டங்கள் உள்ள நிலையில் ஒரு சட்டம் தேவை என்பதில் அதிகமானோர் உடன்பட்டாலும் அது குறித்து வெளிப்படையாகக் கதைப்பதில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் ஒரு சட்டம் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தான் கடந்த காலங்களில் மேற்கொண்ட செயற்பாடுகள், ‘ஒரே நாடு- ஒரே சட்டம்’ என்ற ஜனாதிபதி செயலணியின் தலைவராக நியமிக்கப்படக் காரணமாக அமைந்ததாகவும் தேரர் தெரிவித்துள்ளார்.

மக்கள் எந்தவொரு மதம் அல்லது இனக் குழுவைத் சேர்ந்திருந்தாலும் தேசத்துக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று ஞானசார தேரர் கேட்டுக்கொண்டுள்ளார்.