May 28, 2025 11:23:45

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘புதிய இயற்கை விவசாயப் புரட்சியொன்று அவசியம்’: உலகத் தலைவர்கள் மாநாட்டில் ஜனாதிபதி

இயற்கைக்கு எதிராக மனிதர்கள் செயற்படுவதற்குப் பதிலாக, அதனோடு மிகவும் இணைந்து செயற்பட வேண்டும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ வலியுறுத்தியுள்ளார்.

“நைதரசனை மீண்டும் கண்டுபிடித்தல், காலநிலை மாற்றம், சுகாதார உயிரியல் பன்முகத்தன்மை, நிலையான பொருளாதாரத்துக்கான தீர்வுகள் மற்றும் இணைச் செயற்பாடுகள்” என்ற தலைப்பின் கீழ் நடைபெற்ற கருத்தரங்கில் உரையாற்றும் போதே, ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நிலையான அபிவிருத்தியை அடிப்படையாகக்கொண்ட புதிய விவசாயப் புரட்சியொன்று அவசியம் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

நிலையான அபிவிருத்தியே இலங்கை அரசாங்கத்தின் கொள்கைக் கட்டமைப்பாகும் என்று எடுத்துரைத்துள்ள ஜனாதிபதி, காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சாசனத்துக்கமைய புதுப்பிக்கப்பட்ட தேசிய நிர்ணயங்கள் மற்றும் அபிலாஷைகள் என்பன நன்கு பிரதிபலிக்கின்றதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

“நவீன, விஞ்ஞான பொறிமுறைகள் மற்றும் பண்டைய வழிமுறைகள் ஊடாக, சுற்றாடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாத விவசாய உற்பத்திகளை அதிகரிப்பதே, தற்போது எமக்கு உள்ள சவாலாகக் காணப்படுகின்றது.

இலங்கையில் விவசாயிகளிடையே, பல தசாப்தங்களாக சிறுநீரக நோய் பரவுவது பாரிய பிரச்சினையாக உள்ளது.

இரசாயனப் பசளையை அதிகளவில் பயன்படுத்துவதே இதற்கு மிக முக்கிய காரணமாகியுள்ளது.

இந்த சூழ்நிலையிலேயே இரசாயனப் பசளை இறக்குமதியைக் குறைப்பதற்கும் சேதன விவசாயத்தை அதிகளவில் ஊக்குவிப்பதற்கும் எமது அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது”

என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.