சர்ச்சைக்குரிய சீன உரக் கப்பல் இலங்கையின் எந்தவொரு துறைமுகத்திற்குள்ளும் பிரவேசிக்கவில்லை என்று துறைமுக கட்டுப்பாட்டாளரான நிர்மால் டி சில்வா தெரிவித்துள்ளார்.
குறித்த ‘ஹிப்போ ஸ்பிரிட்’ என்ற கப்பல் இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசித்துள்ளதாக சர்வதேச கடற்பயணங்கள் தொடர்பிலான தரவுகளை வெளியிடும் இணையதளத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும், குறித்த கப்பல், எந்த துறைமுகத்திலிருந்து வருகை தந்துள்ளது என்பது தொடர்பில் அதில் குறிப்பிடப்படவில்லை.
இந்நிலையில், இது குறித்து அறிவித்துள்ள இலங்கை துறைமுக கட்டுப்பாட்டாளர், அந்தக் கப்பல் நாட்டில் எந்தவொரு துறைமுகத்திற்குள்ளும் நுழையவில்லை என்பதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
சீன நிறுவனத்தின் ஊடாக இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படவிருந்த உர மாதிரிகளில் பாதிப்புக்களை ஏற்படுத்தும் பக்டீரியாக்கள் காணப்பட்ட காரணத்தினால் அந்த உரத்தை கொள்வனவு செய்யாதிருப்பதற்கு இலங்கை தீர்மானித்தது.
இதன்படி, அந்த உரத்துடன் வரும் கப்பலை துறைமுகத்திற்குள் அனுமதிக்காதிருப்பதற்கு துறைமுக கட்டுப்பாட்டாளர் நடவடிக்கை எடுத்துள்ளார்.