
இலங்கையில் மூன்றாவது டோஸ் கொவிட் தடுப்பூசி வழங்கும் திட்டம் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
“இரண்டு தடுப்பூசிகளை பெற்றுக் கொண்ட அனைவருக்கும் ஆறு மாதங்களுக்கு பிறகு மூன்றாவது தடுப்பூசியாக பைசர் தடுப்பூசி வழங்கப்படும் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார்.
தடுப்பூசி திட்டத்தில் ஆரம்பத்தில் பின்பற்றப்பட்ட முன்னுரிமை பட்டியலின் படி மூன்றாவது டோஸ் விநியோகம் மேற்கொள்ளப்படும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் கூறியுள்ளார்.
இதன்படி முன்னணி சுகாதாரப் பணியாளர்கள், முப்படையினர் மற்றும் பொலிஸாருக்கு இன்று தொடக்கம் மூன்றாவது தடுப்பூசி போடப்படும்.
அதைத் தொடர்ந்து விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் சுற்றுலாத் துறையில் ஈடுபடுபவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும் என அவர் கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 30 – 60 வயதுக்கு இடைப்பட்ட நீண்ட நாள் நோய் நிலைமைகளை உடையவர்களுக்கும் தடுப்பூசி போடப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு இறுதியாக 20 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.