மக்களை கொலை செய்தமைக்கான காரணத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்பதையே நாங்கள் எப்போதும் கோரி வந்துள்ளோம். அதற்கான காரணத்தை அறிவது எங்களின் உரிமை என்று கொழும்பு பேராயர் வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்தியார் தேவாலயத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு பேசும் போதே மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இவாறு தெரிவித்துள்ளார்.
இது எமக்கு வழங்கும் பரிசல்ல. இதனால், தயவு செய்து ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் இருக்கும் உண்மையான கதையை வெளியிடுங்கள் என்றே நாம் மீண்டும், மீண்டும் நாட்டின் தலைவர்களிடம் கோரிக்கை விடுக்கின்றோம்.
இது நாட்டின் தலைவர்களுடன் மோதல்களை ஏற்படுத்திக் கொள்ளும் போராட்டம் அல்ல.இதனையே நாம் எப்போதும் கூறி வந்துள்ளோம்.
நிரபராதிகளான மக்களை கொலை செய்தமைக்கான காரணத்தை நாங்கள் அறிந்துக்கொள்ள வேண்டும்.அது எமது உரிமை என்பதை நாங்கள் மீண்டும் நினைவூட்ட விரும்புகிறோம்.
நீதி நிலைநாட்டப்படுவதை காண வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு.அதிகளவில் பணத்தை தருமாறு நாங்கள் எதிர்பார்க்கவில்லை.அழிந்தவற்றை நிர்மாணித்து தருமாறு நாங்கள் கோரவில்லை. நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு எனவும் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குறிப்பிட்டுள்ளார்.