January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“எனது ஆட்சியில் விவசாயிகள் பிரச்சினைக்கு ஆளாக மாட்டார்கள்”; முன்னாள் ஜனாதிபதி மைத்திரி!

“எனது ஆட்சியில் விவசாயிகளுக்கு இவ்வளவு பிரச்சினைகள் ஏற்பட அனுமதிக்க மாட்டேன்” என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

விவசாயிகளின் நலன்கள் பற்றி இந்த அரசிடம் எவ்வளவு பேசினாலும் இந்த அரசு எதனையும் கேட்பதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

“பகமுன” நகரத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு விவசாயிகளை நேரில் சென்று பார்வையிட்ட முன்னாள் ஜனாதிபதி, மீண்டும் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு என்ன செய்யப்போகிறார் என்ற கேள்விக்கு பதிலளித்த போதே இதனை தெரிவித்தார்.

விவசாயத்திற்கு தேவையான உரத்தை வழங்குமாறு வலியுறுத்தி மொரகஹகந்த மற்றும் எலஹெர கமநல இயக்கத்தின் 41 விவசாய அமைப்புகள் கடந்த 24 ஆம் திகதி தொடர் உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளனர்.

விவசாயிகளின் உரப்பிரச்சினை குறித்து விவசாய அமைச்சரிடம் பலமுறை விவாதித்த போதும் சாதகமான பதில் வரவில்லை. சில இராஜாங்க அமைச்சர்கள் தன்னை அவதூறாகப் பேசியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இயற்கை உரங்களை பயன்படுத்தி முறையான முறையில் நெல் பயிரிட விவசாயிகளுக்கு கற்றுக் கொடுப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

உலகில் வேறு எந்த நாடும் 100% கரிம உரத்தைப் பயன்படுத்தி விவசாயம் செய்வதில்லை என சுட்டிக்காட்டிய அவர், அவுஸ்திரேலியாவில் கூட 50% கரிம உரத்தையே பயன்படுத்துவதாக கூறினார்.

1980 களில் இருந்து விவசாயிகளுக்காக தான் வாதாடி வருவதாகவும், விவசாயிகள் விஷம் அருந்திய போது விவசாயிகளின் உயிரைக் காக்க முதன் முறையாக பொலன்னறுவையில் சவப்பெட்டிகளை ஏந்தி பிரசாரம் செய்ததாகவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.