July 2, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

டாக்காவிற்கும் கொழும்புக்கும் இடையில் கப்பல் சேவையை ஆரம்பிக்க திட்டம்!

(file photo)

கொழும்பு மற்றும் பங்களாதேஷின் டாக்காவுக்கு இடையே கப்பல் சேவையை தொடங்குவது குறித்து பரிசீலித்து வருவதாக சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் “தாரேக்ம்ட் அரிஃபுல் இஸ்லாம்” மற்றும் சுற்றுலா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஆகியோருக்கு இடையில் சுற்றுலா அமைச்சில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதன்படி எதிர்காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையில் கப்பல் போக்குவரத்தின் ஊடாக உல்லாச பயண சேவையை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டது.

தெற்காசிய பிராந்தியத்தில் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கு அதிக கவனம் செலுத்தப்பட வேண்டுமென அமைச்சர் ரணதுங்க இதன் போது தெரிவித்தார்.

தெற்காசிய நாடுகளின் சுற்றுலாத்துறை அமைச்சர்களின் மாநாட்டின் மூலம் இந்த நாடுகளில் ஒருங்கிணைந்த சுற்றுலா செயல் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இரு நாடுகளுக்கும் இடையில் சுற்றுலா தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட உள்ளதாக பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.

புரிந்துணர்வு ஒப்பந்தம் வரைவு செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் கையெழுத்திடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் மேலும் கூறினார்.

பங்களாதேஷின் சுற்றுலாத்துறை புத்துயிர் பெறுவதற்கு இலங்கையில் சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ளவர்களின் உதவி மிகவும் அவசியமானது என சுட்டிக்காட்டிய உயர்ஸ்தானிகர், அந்த முயற்சிக்கு உதவுமாறு அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார்.

பங்களாதேஷில் இருந்து தனியார் விமான நிறுவனம் ஒன்று பங்களாதேஷிற்கும் இலங்கைக்கும் இடையில் நேரடி விமான சேவையை ஆரம்பிக்க உள்ளதாக உயர்ஸ்தானிகர் தெரிவித்தார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ பங்களாதேஷுக்கு மேற்கொண்ட விஜயத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.